அழகார்ந்தநாயகி பஞ்சகம்
அழகினுக் கழகைத் தந்த
அழகியே, அம்மை யே!பூம்
பொழிலிடைப் பூந்துருத்திப்
பொய்யிலி நாதர், கையில்
மழுவினை, மானை ஏந்தும்
மன்னவன் பாகம் கொண்டோய்!
பழவினைக் காட்டைத் தீய்க்கும்
பதமலர் சரணம் தாயே! 1
தேவியே, மறைகள் நான்கும்
தேடுமெய்ப் பொருளே! ஈசன்
ஆவியே, அமுதம் தோய்ந்த
அழகியே, அரனார் பாகம்
மேவிய மேன்மையே நின்
மென்மலர்ப் பாதம் பாக்கள்
தூவிநான் தொழுது போற்றத்
துணைவர வேண்டும் தாயே! 2
பிரமனங் கிருக்க ஒட்டான்
பிறப்பெனும் சிட்சை செய்வான்!
இரக்கமில் எமனோ என்னை
இவ்விடம் இருக்க ஒட்டான்!
உரமழிந் தோய்ந்தேன்,தேய்ந்தேன்
உதையுறு பந்தாய் ஆனேன்!
அரனொரு பாகம் சேர்ந்த
அழகியே, சரணம் தாயே! 3
பொன்னிலே விருப்பம் இல்லை
பொருளிலே நாட்டம் இல்லை
உன்னையன் றின்றி யாரும்
உறவெனக் கில்லை அம்மே!
இன்னமு தழகீ! ஈசன்
இடப்புறம் கவர்ந்த தாயே!
மின்னலாய் முதுகுத் தண்டின்
மிசையெழு சுடரே!போற்றி! 4
பூரண நிலவாய்ப் பூத்த
பூவன நாதர் வாழ்வே!
நீறணி நிமலர் பாகம்
நிறைவுசெய் அழகீ! அன்ன
பூரணீ! புதுமைக் கெல்லாம்
புதுமையே! உலகுக் காதி
காரணீ! காளீ! காக்கும்
கழலிணை சரணம் தாயே! 5
சு. ரவி

No comments:
Post a Comment