Tuesday, March 8, 2016

கோமளமே - Ramaseshan




கஞ்ச  மலர்களைக் கைகளில்  ஏந்திடும்
கொஞ்சும் அழகேநீ  கோமளமே- தஞ்சம்
உனதடி  என்றும் தொழுதிடுவேன்  மஞ்சுபோல்
என்துயர் மாறும்  மகிழ்ந்து !

பார்வைகள் ஜ்வாலைகளாகும்..சம்போ மகாதேவ தேவ - Ramanan

பார்வைகள் ஜ்வாலைகளாகும்
உன்பார்வைக்கு வேள்பட்ட பாடொன்றே போதும்!
நான்காண நீதோன்றும் காலம்! - இந்த நானொன்றை மட்டும் நீ எரியூட்ட வேண்டும் (சம்போ மகாதேவ தேவ)

அரவங்கள் அணியென்று ஆடும்! உன் ஆலத்தில் துளியேனும் கடன்கேட்கும் போலும்! இதயத்தில் நீ தோன்றும் காலம்! என்
இடமுள்ள விடம்கூட நின்கண்டம் மேவும்! (சம்போ மகாதேவ தேவ)

திரிசூலம் பகையாவும் தீர்க்கும்! உன் திறமான கரம்சேர்ந்து உறவாடி வாழும்! பரிவோடு எனைப்பார்க்கும் காலம்! உன் பரிவாரம் தனிலென்னை ஒன்றாக்க வேண்டும்! (சம்போ மகாதேவ)

இடபாகம் அன்னைக்கென்றாகும்! உன் இதயமும் அதனாலே அவளே என்றாகும்! உடனேகி அவளோடு தோன்றும் அந்த ஒருகணத்தோடினிப் பிறவாமை வேண்டும்!  (சம்போ மகாதேவ தேவ)

சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே - Ramanan

மனம் கொன்ற பாவம் தனைக் கண்ட கோலம்
மலர் மாலை யாகிப் பதம் சூடும் காலம்
விசித்ரம் வினோதம் விளங்காத போதம்
சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

அசைவற்ற கண்கள் அகண்ட ப்ரபஞ்சம்
அமைதித் தடாகம் அலைகள் சுநாதம்
சினத்தோடிருக்கும் தனித்தேன் தரங்கம்
சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

துரும்பாகி நெஞ்சில் துளிர்க்கின்ற கண்ணீர்
அரும்பாத முன்வந் தணைக்கின்ற தெய்வம்
கரங்கள் விசாலம் வரங்கள் சுபாவம்
காருண்யமே ஈசன் காட்டும் ப்ரபாவம்
சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

அவன்தந்த வார்த்தை அவன்வைத்த போதை
அவன்செய்த மாயை அகந்தைப் பதாகை
சிவன்சொந்தம் என்கின்ற போதே வசந்தம்
சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

அலுக்காது நாமம் அடங்காது தாகம்
கணம்தோறும் நெஞ்சத்தில் காபாலி நடனம்
நடுங்கித் துகள்போல் நொறுங்கட்டும் காலம்
பயங்கள் விதிப்பேய்கள் யாவும் நிர்மூலம்
சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

புயல்வீசும் பாதம் நிழல்தேடும் வேதம்
புஜம்போன்ற மெளனத்தில் ஆரங்கள் கீதம்
கணங்கள் யுகங்கள் மயங்கும் ஸ்வரங்கள்
சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

சிரம்தாழ்த்தி எங்கள் சிவன்வெற்றி சொல்ல
கரம்பற்றி மெல்லக் கரைசேர்க்கும் செல்வன்
கபாலன் தயாளன் கனல்மின்னும் சூலன்
அருள்தேடும் கைக்குள் அமர்கின்ற பாலன்
சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

உயிர்நின்ற போதும் உணர்வாக மோதும்
அருள்வீசும் தீபம் அகண்ட ப்ரகாசம்
பதம்கண்ட நெஞ்சில் கணம்தோறும் தில்லை
சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

சிவஸ்துதி - கிரேஸி மோகன்

எத்துணைப் பெரிய கவிஞர்களுடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்மையெல்லாம் சிரிக்க வைக்கும் கிரேஸி மோகன் எவ்வளவு பெரிய நாடகக்காரன் | தனக்குள் இருக்கும் கவிஞனை மறைத்துக் கொண்டு கோமாளி வேடமிடும் நாடகக்காரன். பலே மோகன். அவன் எழுதிய சிவஸ்துதியைப் படித்து மலைக்கலாமே. கவிஞர்களையே திகைக்க வைக்கும், "விழி கர்ப்பப்பை " போன்ற அசத்தலான மஹாவாக்கியங்களில் சொக்கித் திளைக்கலாமே'

உண்டென்று ஒன்றுண்டு கேளாய் -அதை
உண்டு நான் உமிழ்கிறேன் ஒவ்வொரு நாளாய்
விண்டவர் கண்டிலர் கண்டாய் -அதைக்
கண்டு நீ கொண்டாட காட்சிகள் உண்டாய்....(2)

பதி பசு பாசங்கள் மூன்றும் -முறையே
விதி மதி வினை என்ற விவகாரமாகும்
நிதி உந்தன் நெஞ்சிலே காண்பாய் -அது
புதிதல்ல மணம்வீசும் பூத்த மலரான்மா....(3)

புதிரான பூலோகக் கல்லை -நீ
பொய்யென்றும் மெய்யென்றும் பேரிடத் தொல்லை
அதுவென்றும் இதுவென்றும் இல்லை -சுத்த
அதுவே இதுவாக ஆனந்த எல்லை....(4)

 பண்டைநாள் வந்ததோர் பூச்சி -அது
 பலவாய்ப் பெருகிடப் பாரென்று ஆச்சி
 கொண்டதோர் கோலமே காட்சி -அதை
 உண்டில்லை கண்டிடும் உறுதி ஆராய்ச்சி....(5)

 செத்ததோர் பாம்பிந்த தேகம் -சுக
 துக்கமிதில் காண்பது செல்லாத லாபம்
 அத்தைக்கு மீசைமேல் மோகம் -அத்தை
 சித்தப்பன் பார்த்திட சிரைத்திடும் யோகம்....(6)

 வேடனார் வேடத்தில் இறைவன் -அவனே
 விருந்தாகி நீயுண்ண வலைவீசும் இரைவன்
 பாடெல்லாம் அவனென்று பறைவாய் -ஜீவ
 பாவத்தில் பசுபாசம் மெழுகாகக் கரைவாய்....(7)

 பார்முதல் பூதம்நீ அல்ல -பஞ்ச
 புலன்களை ஆண்டிட முயலாதே வெல்ல
 யாரந்த நானென்று உள்ளே -உன்னிப்
 பாரவன் ஆன்மனாய் ஆகுவான் மெல்ல....(8)

 அன்பே சிவமென்ற ஜோதி -அதன்
 ஆதார சக்தியே அருளென்ற பாதி
 பண்பான பக்தர்கள் மீதி -இந்தப்
 பாங்குணர்ந் தோற்க்கில்லை பூலோக வ்யாதி....(9)

போக்கத்த சொப்பனம் நனவு -ஆழ்ந்த
தூக்கத்தில் நிற்பவன் யாரென்று வினவு
சாக்கிதால் சஞ்சலம் தீரும் -ரமண
வாக்கிதை மேற்கொள்ள வழிவந்து சேரும்....(10)

இறப்பதும் பிறப்பதும் யாரு -இங்கு
இருக்கையில் ஆராய்ந்து யோசித்துப் பாரு
உறக்கமே இறப்பென்ற மாயை -உணர
உறங்காமல் உறங்கிடப் போடான்மப் பாயை....(11)

நம்பிக்கை அறிவாக நீளும் -அவ
நம்பிக்கை அறியாமை அதுகுப்பைக் கூளம்
எம்பிக்கை போடட்டும் தாளம் -ஆன்ம
ஏகாந்த வாசியின் ஏற்றமே மூலம்....(12)

இல்லாத இகம்சொப்ப னங்கள் -அதில்
இன்பத்தைத் துய்ப்போர்கள் இருள்பெற்ற மாக்கள்
உள்ளது ஓராயி ரங்கள் -உதறி
உணர்ந்திடு உணர்வென்னும் உச்சிப் பனங்கள்....(13)

சும்மா இருந்திடல் சுகமே -என்று
சொன்னார்கள் முன்னோர்கள் சிவமாகு அகமே
நம்மால் இயன்றது நகமே -அது
நாளாக நாளாக நம்பிக்கை முகமே....(14)

துன்மார்கப் பாதையில் துன்பம் -அந்த
சன்மார்கமே சச்சிதா னந்த இன்பம்
தென்மார்கம் பார்த்திடும் அன்பன் -மவுன
தத்துவம் தோள்கொடுத் தேவுதவும் நண்பன்....(15)

ஓயாது துழைத்திடும் பெண்மை -சக்தி
ஓங்கார நாதத்தின் ரீங்காரத் தன்மை
தாயாகி அன்பர்க்கு நன்மை -நல்கும்
தத்துவம் அவளந்த பித்தர்க்கும் அம்மை....(16)

போகாத ஊருக்கு போக -இங்கு
சாகாது சாகிறோம் ஜனனித்து நோக
தேகான்ம பாவம் முடிக்க -சிவ
தேசிகன் சரணார விந்தம் பிடிக்க....(17)

செல்லாதா காசிந்த மேனி -இது
இல்லாத போதுமி ருப்பவன் ஞானி
கல்லாலின் கீழுற்ற கோலம் -அது
சொல்லாமல் காட்டிடும் சித்தாந்த ஜாலம்....(18)

பல்லாண்டு பல்லாண்டு வாழி -அந்த
பரசிவம் ஒன்றுதான் பவுருஷம் தோழி
உள்ளாண்ட போதவன் போதம் -வெளி
உலகத்தில் விளையாட வேடிக்கை பூதம்....(19)

சூலாயுதம் கொண்ட கையை -சக்தி
வேலாயுதன் வந்த விழிகர்ப்பப் பையை
ஆலால கண்டத்து மெய்யை -எண்ண
அதுநெஞ்சில் ஊற்றிடும் ஆனந்த நெய்யை....(20)

பொன்னார் மேனியன் இடையில் -வரிப்
புலித்தோல் பூண்டவன் ஏறுவான் விடையில்
உன்னார்வம் அவனெதிர் பார்ப்பான் -கொள்ள
உண்ணா முலையோடு வந்தருள் சேர்ப்பான்....(21)

சங்கர சங்கர சம்போ சிவ சங்கர சங்கர சங்கர சம்போ....

அவன் சிவன் - K Ravi

சொக்கன் என்றாலும் சுடலை என்றாலும்
தக்கனைக் கொன்ற ருத்ரன் என்றாலும்
முக்கண் என்றாலும் மூர்க்கன் என்றாலும்
அக்கணமே வரும் ஆண்டவன் அவனே

ஆட்டம் என்றாலும் அடியவர் திரளும்
கூட்டம் என்றாலும் கூத்தென்றாலும்
பாட்டெடுத்தாலும் பிச்சை எடுத்தாலும்
நாட்டமுடன் வரும் நாயகன் அவனே

வெண்ணீ றணிந்தாலும் விழிகள் கலுழ்ந்து
கண்ணீர் பொழிந்தாலும் கவியிசைத்தாலும்
உண்மை உரைத்தாலும் பொய்யென்றாலும்
அண்மை நிழலாகும் அண்ணலும் அவனே

தங்கும் தங்கும்! - சிவசூரி.

தென்னாடுடைய சிவனே போற்றி!


வார்தங்கும் சடைதங்கும் நீருடனே
 வளர்மதியும் தங்கும் தங்கும்,
ஏர்தங்கும் கண்டத்தில் இன்னருளும்
 நமக்கென்றும் தங்கும்  தங்கும்!
கார்தங்கும் தேவியவள் காதலினால்
 இடப்பாகம் தங்கும் தங்கும்!
தார்தங்கும் விதமாகத் தானாடும்
 பாம்பென்றும் தங்கும் தங்கும்!

ஆர்தங்கும் அனல்தங்கும் அண்ணலவன்
 அருளென்றும் தங்கும் தங்கும்!
கூர்தங்கும் திரிசூலம் கொண்டாடும்
 நெஞ்சத்தில் தங்கும் தங்கும்!
மார்தங்கும் கொன்றைமலர் மணமெல்லாம்
 நம்நெஞ்சில் தங்கும் தங்கும்!
கார்தங்கும் கழலடியும் கவிநெஞ்சில்
 களிப்புடேனே தங்கும் தங்கும்!

ஊர்தங்கும் உயிர்தங்கும் ஒளியாக
 என்றென்றும் தங்கும் தங்கும்,

நீர்தங்கும் நிலமெங்கும் நிர்மலனின்
 எழிலென்றும் தங்கும் தங்கும்!
தேர்தங்கும் சிவனாரைத்  தரிசிக்கத்
 தெய்வங்கள் தங்கும் தங்கும்!
நார்தங்கும் மலர்போல நம்நாவில்
 திருநாமம் தங்கும் தங்கும்!


பார்தங்கும் பாவென்றும் போதெல்லாம்
நம்நெஞ்சில் தங்கும் தங்கும்,
சீர்தங்கும் சிவனாரைச் செப்புகின்ற
 பாவென்றும் தங்கும்  தங்கும்!
நேர்தங்கும் நிரைதங்கும் நிகரில்லாச்
 செந்தமிழும் தங்கும் தங்கும்!
பேர்தங்கும் புகழ்தங்கும் பெம்மானின்
 திருவருளால் தங்கும் தங்கும்.

சிவசூரி.

பெண் - Ramaseshan

ஓயா  மலுழைத்து நல்லுலகம் மேன்மையுற
தாயாய்த் தரணியில் வந்தவளே - சேயாகக்
கண்டு கனிவுடன் தன்குடும்பம் பேணிடும்
பெண்ணுக்கு யார்தான் நிகர் !

இது வாவர் சாமியே வந்து பாடுற பாட்டு... - K Ravi

(இது வாவர் சாமியே வந்து பாடுற பாட்டு.)

கல்லு முள்ளு காடு மலை கடந்து வந்தேன் - காரணம்
விட்ட குறை தொட்ட குறைதான்
வில்லும் அம்பும் ஏந்திப் புலி
மேலவராறே - என்
சின்னதுரை சின்னதுரை தான்
சின்னதுரை சின்னதுரை தான்
      தோழன்னா தோழனிந்த
       வாவருதான் - என்
       தோள் மேலே சின்னதுரை
       தேவரு தான்

பூவுக்கு மத்தியிலே மூணாம் பிறை
போலச் சிரிப்பாரே என் சின்னதுரை
பம்பைநதி யோரமவர்
ராஜநடை- அதைப்
பாத்துரசிச் சிருந்ததெலாம்
பழையகதை
       தோழன்னா தோழனிந்த
       வாவருதான் - என்
       தோள் மேலே சின்னதுரை
       தேவரு தான்

எந்த ஜன்மம் எந்த யுகம்
நெனவிலில்லே - நான்
என்னதவம் செஞ்சேனோ
வெளங்கவில்லே
பந்தளத்து சிங்கக்குட்டி
பக்கத்துல வேஷங்கட்டிச்
சேவகனா நிக்கஎடம்
புடிச்சுக்கிட்டேன்
தெய்வத்துக்கே காவலனா
நடிச்சுப்பட்டேன்
       காவலுன்னா காவலிந்த
       வாவருதான் - ஒரு
       காத்துக்கருப் பண்டாமப்
        பாத்துக்குவான்

காட்டெருமை வேட்டைக்கென்னைக்
கூட்டிக்கிட்டுப் போனபுள்ளே
கோட்டை கட்டித் தந்தாரே
காட்டுக்குள்ளே - என்னைக்
காத்திருன்னு சொல்லிப் புட்டு
மேட்டிலேறிக் குந்திக்கிட்டு
வாவருன்னு கூப்பிடுதே
இந்தப் புள்ளே
அல்லாஹு அக்பர் நானோர்
அடிமை யப்பா
எல்லாரும் அவருக்குள்ளே
சரணம் அப்பா

அருள்மிகு நடராசர் பதிகம் - அருட்கவி கு.செ.இராமசாமி.



               ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
               ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

அங்கும் இங்கும் எங்குமாய் அமைந்த தேவதேவனே
ஆதியாய் அநாதியாய்ச் சமைந்த சோதி ரூபனே
மங்கலங்கள் யாவும் நல்கு அம்பிகை மணாளனே
மைந்தன் செய்யும் பூசையில் மகிழ்ந்தருள் நடேசனே    ஓம்

எந்த இல்லமாயினும் இருந்த இல் சிதம்பரம்
எடுத்த பீடம் ஆலயம் தொடுத்த கூரை கோபுரம்
செந்தமிழ்சொல் மந்திரம் திருந்தும் அன்பே ஆகமம்
சிவந்தபாதம் பங்கயம் உவந்தருள் நடேசனே       ஓம்

மன்றிலே எடுத்தகால் என் மனையிலும் எடுத்துவை
மனதிலே நினைந்த நன்மை விரைவிலே முடித்துவை
என்றும் தீமை அணுகிடாமல் ஈசனே தடுத்துவை
ஏத்தும் அன்பர்குழுவில் என்னைச் சேர்த்துவை நடேசனே     ஓம்

ஆபயந்த ஐந்தினோடு பால்பழம் பஞ்சாமிர்தம்
ஆலைவாய்க் கரும்பு தெங்குதேன் சுகுந்த சந்தானம்
நீபயந்த யாவையும் நினக்களித்தேன் ஈசனே
நேர்த்தியாய் அனைத்தும்ஆடி வாழ்த்துவாய் நடேசனே    ஓம்

சிவமே லயமே

லயமே சிவமே தயங்காத காருண்யமே
மயனால் பிறந்த திரிபுரங்களை வெல்ல
பாணம் தந்த சிலையே
காலம் வென்ற நிலையே --லயமே

பனியில் பூத்த தழலே -வெண்ணீறு
கணவு காணும் நிழலே
மதியும் அரவமும் நதியும் உலவிடும்
கானகக் குழலே
முகில் உலாவும் நுதலே --லயமே

தீம் தோம் தீம் தோம்
தீம் திரன தன தீம் தோம்

தவம் கலைந்ததும் தாண்டவம்
புயல் நிமிர்ந்ததைப் போல் நர்த்தனம்
இமை விரிந்து சடை பிரிந்து
இசை சிலிர்த்துத் தாளம் தெறிக்க
வந்தோம் என துந்துபி பாடி வரும்
தந்தோம் எனத் தாண்டவம் ஆடும் சிவம் -வந்தோம் .....
           --லயமே .....

தாய் - Hari Krishnan

என் தாயாருடைய இறுதிச் சமயங்களில் ஒருநாள் எழுதியது.   ஒருவரியும் கற்பனை இல்லை.  செய்ததைச் சொல்லியிருக்கிறேன். மகளிர் தினத்தில் அவருக்காகவும் எல்லாத் தாய்களுக்காகவும்:


தொட்டுத் தோளில் மெதுவாக
தூக்கிச் சாய்த்து விரல்வழியே
கொட்டும் மனத்தைச் சமர்ப்பித்து
கோதித் தலையை முதுகினிலே
தட்டி அணைத்து ஒருவாயே
சாதம் ஊட்டி விழிவாசல்
முட்டும் கண்ணீர்க் கணைபோட்டு
மூன்று நிமிடம் முன்னால்தான்

நடுங்கும் கையும் தொண்டைக்குள்
நசுங்கிப் போகும் மழலையுமாய்
இடுங்கிப் போகும் கண்ணிலொளி
என்னைப் பார்த்துச் சிதறுவதாய்
மடியில் தலையைக் கிடத்தியதால்
மலர்ந்த மனமும் கொண்டவளை
'படும்மா' என்று கரகரத்தேன்.
பாதம் பற்றிக் கண்சேர்த்தேன்.

என்னைச் சுமந்த என்ஜனனி
இன்று தளர்ந்தாள் அசையாமல்.
முன்னம் சுமந்த தன்னுயிரை
மூடிக் கண்ணுள் வைத்தபடி
சின்னக் குழந்தை எனக்கான
தேவதை அங்கே தூங்குகிறாள்.
அன்னை அங்கே உறங்குகிறாள்
அம்மா இன்னும் எத்தனைநாள்.

My Grand Mother - Amamma

This is for my grand mother who took time to chisel me😊
 My Grand Mother-Amamma

She had been to me a shadow
That could rise and give me shade.
Though like an autumn meadow
Her smiles had begun to fade,
My treasure lay in her eyes
That softly peered to know my pains.

I only saw a child disguised-
She saved only to give away-
Her life had been a prop to woes
Of all that went into her sway.
Her knowledge was but to suppose
That health and wealth were two supports
For life to lean and to relax
And wait for storms to go away.
Her eyes had drunk a lot of tears;
I had not seen them reach her cheeks.
Hers were always silent fears
That liked to fight but not go meek.
Her lap had lulled me into sleep;
Her lips had lashed me back to light;
I had basked beneath her care,
With never a want or woe to fight.
Some moody days sent her back,
To memories of her yesterdays-
With beady eyes she would relate
That Luck refused to come her way;
Of every twist in her punishing fate
She told me, moulding me like clay.
Though protected I am, unlike her,
Cautious do I tread till date.
A lifetime's woes she passed on to me
And made me richer, every way!
"When I'm gone, will you think of me?"
Amamma, yes, now and all the way!


அம்மா...



அம்மாவுக்கு இறுதி விடை கொடுத்து வீடு திரும்பியாச்சு!
பாசம், பரிவு, அன்பு என்று இளகிய மனமும், இரும்பு போன்ற மன உறுதி,வைராக்கியம், பிடிவாதம், தான் கொண்ட கொள்கையில் பிடிப்பு என்ற இறுக்கமும், ‘கண் பார்த்தால் கைசெய்யும்’ என்ற அளவில் எந்த ஒரு கைவினையையும் சுலபமாகக் கற்றுத்தேறும் ஆர்வமும்-

ஓர் அபூர்வக் கலவை அம்மா!.

பொருளாதார வசதி குறைவாய் இருந்த காலகட்டங்களிலும், எப்போதும் வீட்டுக்கு எத்தனை விருந்தினர் வந்தாலும், அத்தனை பேருக்கும் சுவையான உணவு இருக்கும். பண்டிகை நாட்களிலோ ‘குறைவொன்றும் இல்லை கோவிந்தா’ தான்! தீபாவளி என்றால் உள்ளாடை முதல்,கர்சீப் வரை எல்லாருக்கும் புதிதாக அடுக்கப்பட்டிருக்கும். 2 ஸ்வீட், 4 காரம், லேகியம் என்று அனைத்தும் வீட்டிலேயே தயாராகும்.

உழைப்புக்கு அஞ்சாத அம்மா!

தையல் கலையில் தேர்ச்சிபெற்று, மயிலையில் ஒரு மாதர் சங்கக் கூட்டுறவு அமைப்பில் சேர்ந்து, ஸ்கூல் யூனிஃபர்ம் போன்ற ஆர்டர் எடுத்து, வீட்டில் தைத்துக் கொடுத்து அந்த சிறு வருமானத்தையும் வீட்டுப் பொருளாதாரத்திற்கு முட்டுக் கொடுத்து-

தன் நேரத்தை வீணாக்காத அம்மா!

அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளையும், எங்கள் நண்பர்களையும் தன் மக்களாகப் பாவித்து அன்புகாட்டும் மனம். ஒருமுறை பக்கத்து வீட்டுப் பெண்குழந்தை (வயது3) வீட்டிலிருந்த தூக்க மாத்திரைகளை மிட்டாயென்று எண்ணித் தின்றுவிட்டுத் துவண்டு தலைதொங்க, அத்தனை பேரும் செய்வதறியாது திகைத்த போது, போட்டது போட்டபடி விட்டு, குழந்தையை அள்ளிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடி, அவள் உயிரை மீட்டு வந்த

செயல்வீராங்கனை அம்மா!

எந்த ராஜா எந்தப் பட்டினம் போனாலும், அப்பாவோடு சேர்ந்து காலை அலுவல்களுக்கிடையே லலிதாஸஹஸ்ரநாமம் தினசரி பாராயணம் செய்யும் அம்மா!

மயிலை கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி மாத ப்ரம்மோத்ஸவத்தின் முக்கியத்திருவிழாக்களுக்கு (3ஆம் நாள் அதிகாரநந்தி, 5ஆம் இரவு வெள்ளிவிடை, 7ஆம் நாள் திருத்தேர், 8 ஆம் நாள் அறுபத்துமூவர், அன்றுமாலை வைரமுடி சேவை) வருடம் தவறாமல் அழைத்துச் செல்லும் அம்மா!

வீட்டுப் பொருளாதாரச் சிக்கல்களுக்கு நடுவே எங்கள் வாழ்க்கைத்தரத்தை மெல்லமெல்ல முன்னேற்றி, ஒரு சொந்தவீடு என்ற கனவைத் திட்டமிட்டு நனவாக்கிய அம்மா!

1967ஆம் ஆண்டு, எனக்குப் பொறியியல் படிப்புக்காகக் கோவையில் கிடைத்த உத்தரவை, ஒரு குடும்ப நண்பருடைய உதவியுடன் தொழில்நுட்பப் படிப்பின் இயக்குனரைச் சந்தித்து கிண்டி கல்லூரிக்கு மாற்றல் வாங்கித் தந்த அம்மா!

1973 ஆம் வருடம், பிள்ளைகள் நாங்கள் வாழ்க்கையில் காலூன்றாத நிலையில் அப்பா திடீரென்று காலமானபோது, எங்கள் வாழ்க்கைப் படகு தத்தளிக்காமல் தேர்ந்த மாலுமியாகச் செயல்பட்டு எங்களைக் கரை சேர்த்த அம்மா!

தனக்குக் கிடைத்த குடும்ப ஓய்வூதியத்தொகையை, சேமித்து வைத்து அதைக் கண்ணும் கருத்துமாகத் துல்லியமாகக் கணக்கிட்டுத் தன்பிள்ளைகளுக்கும், பேரன், பேத்திகளுக்கும், அவ்வப்போது தவறாமல் பங்கீடு செய்யத் தவறாத அம்மா!

தன்மக்கள் நலம் வேண்டி, தன் உடல் வருத்தி, உப்பில்லாத உணவும், உணவே இல்லாத நோன்புமாகத் தன் வாழ்வைத் தியாகவேள்வியாக வாழ்ந்த அம்மா!

நான் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அறுவை சிகித்சைக்காக அனுமதிக்கப்பட்ட நாட்களிலும், என் ஐமபது வயதில் அம்மையின் வெம்மையால் வீழ்ந்தபோதும், இரவு பகல் பாராமல் என்னை அருகிருந்து அகலாமல் காப்பாற்றிய அம்மா!

கால்மூட்டுகள் தேய்ந்தபோதும், 75 வயதில் அதற்குப் பயிற்சி கொடுக்க, எக்ஸர்சைஸ் ஸைக்கிள் வாங்கிப் பயிற்சி செய்த அம்மா! தன் கடைசிகாலங்கள் வரை தன் வேலையைத்தானே பார்த்துக் கொள்வதென்ற பிடிவாத அம்மா!

நினைவு மழுங்கிய இறுதி நாட்களிலும் பயிற்சி தரவந்த ஃபிஸியோ தெரப்பிஸ்டிடம் “Don’t Touch me; self Help is the Best Help”என்று சொல்லி அசத்திய அம்மா! “என்னை என் அம்மா அழைக்கிறார்; ஆனால் நான் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டேன்” என்று திடமாக எமனை எதிர்த்துப் போராடிய அம்மா!

அம்மாவைப் பற்றிய நினைவுப் பதிவுகளுக்கு ஏது எல்லை!

அம்மா,சிறுவனாக இருந்த நாட்களில், எங்களை வீட்டில் விட்டுவிட்டு, அப்பாவோடு மாலையில் வெளியில் செல்லும் நீங்கள் வீடுதிரும்ப நேரமானால், தவித்துத் தவித்து, வந்தவுடன் தாவிஅணைத்து ஆறுதல் பெறுவேனே, அம்மா-

இன்றைக்கு….?

சு.ரவி