Tuesday, March 8, 2016

கோமளமே - Ramaseshan




கஞ்ச  மலர்களைக் கைகளில்  ஏந்திடும்
கொஞ்சும் அழகேநீ  கோமளமே- தஞ்சம்
உனதடி  என்றும் தொழுதிடுவேன்  மஞ்சுபோல்
என்துயர் மாறும்  மகிழ்ந்து !

பார்வைகள் ஜ்வாலைகளாகும்..சம்போ மகாதேவ தேவ - Ramanan

பார்வைகள் ஜ்வாலைகளாகும்
உன்பார்வைக்கு வேள்பட்ட பாடொன்றே போதும்!
நான்காண நீதோன்றும் காலம்! - இந்த நானொன்றை மட்டும் நீ எரியூட்ட வேண்டும் (சம்போ மகாதேவ தேவ)

அரவங்கள் அணியென்று ஆடும்! உன் ஆலத்தில் துளியேனும் கடன்கேட்கும் போலும்! இதயத்தில் நீ தோன்றும் காலம்! என்
இடமுள்ள விடம்கூட நின்கண்டம் மேவும்! (சம்போ மகாதேவ தேவ)

திரிசூலம் பகையாவும் தீர்க்கும்! உன் திறமான கரம்சேர்ந்து உறவாடி வாழும்! பரிவோடு எனைப்பார்க்கும் காலம்! உன் பரிவாரம் தனிலென்னை ஒன்றாக்க வேண்டும்! (சம்போ மகாதேவ)

இடபாகம் அன்னைக்கென்றாகும்! உன் இதயமும் அதனாலே அவளே என்றாகும்! உடனேகி அவளோடு தோன்றும் அந்த ஒருகணத்தோடினிப் பிறவாமை வேண்டும்!  (சம்போ மகாதேவ தேவ)

சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே - Ramanan

மனம் கொன்ற பாவம் தனைக் கண்ட கோலம்
மலர் மாலை யாகிப் பதம் சூடும் காலம்
விசித்ரம் வினோதம் விளங்காத போதம்
சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

அசைவற்ற கண்கள் அகண்ட ப்ரபஞ்சம்
அமைதித் தடாகம் அலைகள் சுநாதம்
சினத்தோடிருக்கும் தனித்தேன் தரங்கம்
சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

துரும்பாகி நெஞ்சில் துளிர்க்கின்ற கண்ணீர்
அரும்பாத முன்வந் தணைக்கின்ற தெய்வம்
கரங்கள் விசாலம் வரங்கள் சுபாவம்
காருண்யமே ஈசன் காட்டும் ப்ரபாவம்
சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

அவன்தந்த வார்த்தை அவன்வைத்த போதை
அவன்செய்த மாயை அகந்தைப் பதாகை
சிவன்சொந்தம் என்கின்ற போதே வசந்தம்
சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

அலுக்காது நாமம் அடங்காது தாகம்
கணம்தோறும் நெஞ்சத்தில் காபாலி நடனம்
நடுங்கித் துகள்போல் நொறுங்கட்டும் காலம்
பயங்கள் விதிப்பேய்கள் யாவும் நிர்மூலம்
சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

புயல்வீசும் பாதம் நிழல்தேடும் வேதம்
புஜம்போன்ற மெளனத்தில் ஆரங்கள் கீதம்
கணங்கள் யுகங்கள் மயங்கும் ஸ்வரங்கள்
சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

சிரம்தாழ்த்தி எங்கள் சிவன்வெற்றி சொல்ல
கரம்பற்றி மெல்லக் கரைசேர்க்கும் செல்வன்
கபாலன் தயாளன் கனல்மின்னும் சூலன்
அருள்தேடும் கைக்குள் அமர்கின்ற பாலன்
சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

உயிர்நின்ற போதும் உணர்வாக மோதும்
அருள்வீசும் தீபம் அகண்ட ப்ரகாசம்
பதம்கண்ட நெஞ்சில் கணம்தோறும் தில்லை
சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

சிவஸ்துதி - கிரேஸி மோகன்

எத்துணைப் பெரிய கவிஞர்களுடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்மையெல்லாம் சிரிக்க வைக்கும் கிரேஸி மோகன் எவ்வளவு பெரிய நாடகக்காரன் | தனக்குள் இருக்கும் கவிஞனை மறைத்துக் கொண்டு கோமாளி வேடமிடும் நாடகக்காரன். பலே மோகன். அவன் எழுதிய சிவஸ்துதியைப் படித்து மலைக்கலாமே. கவிஞர்களையே திகைக்க வைக்கும், "விழி கர்ப்பப்பை " போன்ற அசத்தலான மஹாவாக்கியங்களில் சொக்கித் திளைக்கலாமே'

உண்டென்று ஒன்றுண்டு கேளாய் -அதை
உண்டு நான் உமிழ்கிறேன் ஒவ்வொரு நாளாய்
விண்டவர் கண்டிலர் கண்டாய் -அதைக்
கண்டு நீ கொண்டாட காட்சிகள் உண்டாய்....(2)

பதி பசு பாசங்கள் மூன்றும் -முறையே
விதி மதி வினை என்ற விவகாரமாகும்
நிதி உந்தன் நெஞ்சிலே காண்பாய் -அது
புதிதல்ல மணம்வீசும் பூத்த மலரான்மா....(3)

புதிரான பூலோகக் கல்லை -நீ
பொய்யென்றும் மெய்யென்றும் பேரிடத் தொல்லை
அதுவென்றும் இதுவென்றும் இல்லை -சுத்த
அதுவே இதுவாக ஆனந்த எல்லை....(4)

 பண்டைநாள் வந்ததோர் பூச்சி -அது
 பலவாய்ப் பெருகிடப் பாரென்று ஆச்சி
 கொண்டதோர் கோலமே காட்சி -அதை
 உண்டில்லை கண்டிடும் உறுதி ஆராய்ச்சி....(5)

 செத்ததோர் பாம்பிந்த தேகம் -சுக
 துக்கமிதில் காண்பது செல்லாத லாபம்
 அத்தைக்கு மீசைமேல் மோகம் -அத்தை
 சித்தப்பன் பார்த்திட சிரைத்திடும் யோகம்....(6)

 வேடனார் வேடத்தில் இறைவன் -அவனே
 விருந்தாகி நீயுண்ண வலைவீசும் இரைவன்
 பாடெல்லாம் அவனென்று பறைவாய் -ஜீவ
 பாவத்தில் பசுபாசம் மெழுகாகக் கரைவாய்....(7)

 பார்முதல் பூதம்நீ அல்ல -பஞ்ச
 புலன்களை ஆண்டிட முயலாதே வெல்ல
 யாரந்த நானென்று உள்ளே -உன்னிப்
 பாரவன் ஆன்மனாய் ஆகுவான் மெல்ல....(8)

 அன்பே சிவமென்ற ஜோதி -அதன்
 ஆதார சக்தியே அருளென்ற பாதி
 பண்பான பக்தர்கள் மீதி -இந்தப்
 பாங்குணர்ந் தோற்க்கில்லை பூலோக வ்யாதி....(9)

போக்கத்த சொப்பனம் நனவு -ஆழ்ந்த
தூக்கத்தில் நிற்பவன் யாரென்று வினவு
சாக்கிதால் சஞ்சலம் தீரும் -ரமண
வாக்கிதை மேற்கொள்ள வழிவந்து சேரும்....(10)

இறப்பதும் பிறப்பதும் யாரு -இங்கு
இருக்கையில் ஆராய்ந்து யோசித்துப் பாரு
உறக்கமே இறப்பென்ற மாயை -உணர
உறங்காமல் உறங்கிடப் போடான்மப் பாயை....(11)

நம்பிக்கை அறிவாக நீளும் -அவ
நம்பிக்கை அறியாமை அதுகுப்பைக் கூளம்
எம்பிக்கை போடட்டும் தாளம் -ஆன்ம
ஏகாந்த வாசியின் ஏற்றமே மூலம்....(12)

இல்லாத இகம்சொப்ப னங்கள் -அதில்
இன்பத்தைத் துய்ப்போர்கள் இருள்பெற்ற மாக்கள்
உள்ளது ஓராயி ரங்கள் -உதறி
உணர்ந்திடு உணர்வென்னும் உச்சிப் பனங்கள்....(13)

சும்மா இருந்திடல் சுகமே -என்று
சொன்னார்கள் முன்னோர்கள் சிவமாகு அகமே
நம்மால் இயன்றது நகமே -அது
நாளாக நாளாக நம்பிக்கை முகமே....(14)

துன்மார்கப் பாதையில் துன்பம் -அந்த
சன்மார்கமே சச்சிதா னந்த இன்பம்
தென்மார்கம் பார்த்திடும் அன்பன் -மவுன
தத்துவம் தோள்கொடுத் தேவுதவும் நண்பன்....(15)

ஓயாது துழைத்திடும் பெண்மை -சக்தி
ஓங்கார நாதத்தின் ரீங்காரத் தன்மை
தாயாகி அன்பர்க்கு நன்மை -நல்கும்
தத்துவம் அவளந்த பித்தர்க்கும் அம்மை....(16)

போகாத ஊருக்கு போக -இங்கு
சாகாது சாகிறோம் ஜனனித்து நோக
தேகான்ம பாவம் முடிக்க -சிவ
தேசிகன் சரணார விந்தம் பிடிக்க....(17)

செல்லாதா காசிந்த மேனி -இது
இல்லாத போதுமி ருப்பவன் ஞானி
கல்லாலின் கீழுற்ற கோலம் -அது
சொல்லாமல் காட்டிடும் சித்தாந்த ஜாலம்....(18)

பல்லாண்டு பல்லாண்டு வாழி -அந்த
பரசிவம் ஒன்றுதான் பவுருஷம் தோழி
உள்ளாண்ட போதவன் போதம் -வெளி
உலகத்தில் விளையாட வேடிக்கை பூதம்....(19)

சூலாயுதம் கொண்ட கையை -சக்தி
வேலாயுதன் வந்த விழிகர்ப்பப் பையை
ஆலால கண்டத்து மெய்யை -எண்ண
அதுநெஞ்சில் ஊற்றிடும் ஆனந்த நெய்யை....(20)

பொன்னார் மேனியன் இடையில் -வரிப்
புலித்தோல் பூண்டவன் ஏறுவான் விடையில்
உன்னார்வம் அவனெதிர் பார்ப்பான் -கொள்ள
உண்ணா முலையோடு வந்தருள் சேர்ப்பான்....(21)

சங்கர சங்கர சம்போ சிவ சங்கர சங்கர சங்கர சம்போ....

அவன் சிவன் - K Ravi

சொக்கன் என்றாலும் சுடலை என்றாலும்
தக்கனைக் கொன்ற ருத்ரன் என்றாலும்
முக்கண் என்றாலும் மூர்க்கன் என்றாலும்
அக்கணமே வரும் ஆண்டவன் அவனே

ஆட்டம் என்றாலும் அடியவர் திரளும்
கூட்டம் என்றாலும் கூத்தென்றாலும்
பாட்டெடுத்தாலும் பிச்சை எடுத்தாலும்
நாட்டமுடன் வரும் நாயகன் அவனே

வெண்ணீ றணிந்தாலும் விழிகள் கலுழ்ந்து
கண்ணீர் பொழிந்தாலும் கவியிசைத்தாலும்
உண்மை உரைத்தாலும் பொய்யென்றாலும்
அண்மை நிழலாகும் அண்ணலும் அவனே

தங்கும் தங்கும்! - சிவசூரி.

தென்னாடுடைய சிவனே போற்றி!


வார்தங்கும் சடைதங்கும் நீருடனே
 வளர்மதியும் தங்கும் தங்கும்,
ஏர்தங்கும் கண்டத்தில் இன்னருளும்
 நமக்கென்றும் தங்கும்  தங்கும்!
கார்தங்கும் தேவியவள் காதலினால்
 இடப்பாகம் தங்கும் தங்கும்!
தார்தங்கும் விதமாகத் தானாடும்
 பாம்பென்றும் தங்கும் தங்கும்!

ஆர்தங்கும் அனல்தங்கும் அண்ணலவன்
 அருளென்றும் தங்கும் தங்கும்!
கூர்தங்கும் திரிசூலம் கொண்டாடும்
 நெஞ்சத்தில் தங்கும் தங்கும்!
மார்தங்கும் கொன்றைமலர் மணமெல்லாம்
 நம்நெஞ்சில் தங்கும் தங்கும்!
கார்தங்கும் கழலடியும் கவிநெஞ்சில்
 களிப்புடேனே தங்கும் தங்கும்!

ஊர்தங்கும் உயிர்தங்கும் ஒளியாக
 என்றென்றும் தங்கும் தங்கும்,

நீர்தங்கும் நிலமெங்கும் நிர்மலனின்
 எழிலென்றும் தங்கும் தங்கும்!
தேர்தங்கும் சிவனாரைத்  தரிசிக்கத்
 தெய்வங்கள் தங்கும் தங்கும்!
நார்தங்கும் மலர்போல நம்நாவில்
 திருநாமம் தங்கும் தங்கும்!


பார்தங்கும் பாவென்றும் போதெல்லாம்
நம்நெஞ்சில் தங்கும் தங்கும்,
சீர்தங்கும் சிவனாரைச் செப்புகின்ற
 பாவென்றும் தங்கும்  தங்கும்!
நேர்தங்கும் நிரைதங்கும் நிகரில்லாச்
 செந்தமிழும் தங்கும் தங்கும்!
பேர்தங்கும் புகழ்தங்கும் பெம்மானின்
 திருவருளால் தங்கும் தங்கும்.

சிவசூரி.

பெண் - Ramaseshan

ஓயா  மலுழைத்து நல்லுலகம் மேன்மையுற
தாயாய்த் தரணியில் வந்தவளே - சேயாகக்
கண்டு கனிவுடன் தன்குடும்பம் பேணிடும்
பெண்ணுக்கு யார்தான் நிகர் !

இது வாவர் சாமியே வந்து பாடுற பாட்டு... - K Ravi

(இது வாவர் சாமியே வந்து பாடுற பாட்டு.)

கல்லு முள்ளு காடு மலை கடந்து வந்தேன் - காரணம்
விட்ட குறை தொட்ட குறைதான்
வில்லும் அம்பும் ஏந்திப் புலி
மேலவராறே - என்
சின்னதுரை சின்னதுரை தான்
சின்னதுரை சின்னதுரை தான்
      தோழன்னா தோழனிந்த
       வாவருதான் - என்
       தோள் மேலே சின்னதுரை
       தேவரு தான்

பூவுக்கு மத்தியிலே மூணாம் பிறை
போலச் சிரிப்பாரே என் சின்னதுரை
பம்பைநதி யோரமவர்
ராஜநடை- அதைப்
பாத்துரசிச் சிருந்ததெலாம்
பழையகதை
       தோழன்னா தோழனிந்த
       வாவருதான் - என்
       தோள் மேலே சின்னதுரை
       தேவரு தான்

எந்த ஜன்மம் எந்த யுகம்
நெனவிலில்லே - நான்
என்னதவம் செஞ்சேனோ
வெளங்கவில்லே
பந்தளத்து சிங்கக்குட்டி
பக்கத்துல வேஷங்கட்டிச்
சேவகனா நிக்கஎடம்
புடிச்சுக்கிட்டேன்
தெய்வத்துக்கே காவலனா
நடிச்சுப்பட்டேன்
       காவலுன்னா காவலிந்த
       வாவருதான் - ஒரு
       காத்துக்கருப் பண்டாமப்
        பாத்துக்குவான்

காட்டெருமை வேட்டைக்கென்னைக்
கூட்டிக்கிட்டுப் போனபுள்ளே
கோட்டை கட்டித் தந்தாரே
காட்டுக்குள்ளே - என்னைக்
காத்திருன்னு சொல்லிப் புட்டு
மேட்டிலேறிக் குந்திக்கிட்டு
வாவருன்னு கூப்பிடுதே
இந்தப் புள்ளே
அல்லாஹு அக்பர் நானோர்
அடிமை யப்பா
எல்லாரும் அவருக்குள்ளே
சரணம் அப்பா

அருள்மிகு நடராசர் பதிகம் - அருட்கவி கு.செ.இராமசாமி.



               ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
               ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

அங்கும் இங்கும் எங்குமாய் அமைந்த தேவதேவனே
ஆதியாய் அநாதியாய்ச் சமைந்த சோதி ரூபனே
மங்கலங்கள் யாவும் நல்கு அம்பிகை மணாளனே
மைந்தன் செய்யும் பூசையில் மகிழ்ந்தருள் நடேசனே    ஓம்

எந்த இல்லமாயினும் இருந்த இல் சிதம்பரம்
எடுத்த பீடம் ஆலயம் தொடுத்த கூரை கோபுரம்
செந்தமிழ்சொல் மந்திரம் திருந்தும் அன்பே ஆகமம்
சிவந்தபாதம் பங்கயம் உவந்தருள் நடேசனே       ஓம்

மன்றிலே எடுத்தகால் என் மனையிலும் எடுத்துவை
மனதிலே நினைந்த நன்மை விரைவிலே முடித்துவை
என்றும் தீமை அணுகிடாமல் ஈசனே தடுத்துவை
ஏத்தும் அன்பர்குழுவில் என்னைச் சேர்த்துவை நடேசனே     ஓம்

ஆபயந்த ஐந்தினோடு பால்பழம் பஞ்சாமிர்தம்
ஆலைவாய்க் கரும்பு தெங்குதேன் சுகுந்த சந்தானம்
நீபயந்த யாவையும் நினக்களித்தேன் ஈசனே
நேர்த்தியாய் அனைத்தும்ஆடி வாழ்த்துவாய் நடேசனே    ஓம்

சிவமே லயமே

லயமே சிவமே தயங்காத காருண்யமே
மயனால் பிறந்த திரிபுரங்களை வெல்ல
பாணம் தந்த சிலையே
காலம் வென்ற நிலையே --லயமே

பனியில் பூத்த தழலே -வெண்ணீறு
கணவு காணும் நிழலே
மதியும் அரவமும் நதியும் உலவிடும்
கானகக் குழலே
முகில் உலாவும் நுதலே --லயமே

தீம் தோம் தீம் தோம்
தீம் திரன தன தீம் தோம்

தவம் கலைந்ததும் தாண்டவம்
புயல் நிமிர்ந்ததைப் போல் நர்த்தனம்
இமை விரிந்து சடை பிரிந்து
இசை சிலிர்த்துத் தாளம் தெறிக்க
வந்தோம் என துந்துபி பாடி வரும்
தந்தோம் எனத் தாண்டவம் ஆடும் சிவம் -வந்தோம் .....
           --லயமே .....

தாய் - Hari Krishnan

என் தாயாருடைய இறுதிச் சமயங்களில் ஒருநாள் எழுதியது.   ஒருவரியும் கற்பனை இல்லை.  செய்ததைச் சொல்லியிருக்கிறேன். மகளிர் தினத்தில் அவருக்காகவும் எல்லாத் தாய்களுக்காகவும்:


தொட்டுத் தோளில் மெதுவாக
தூக்கிச் சாய்த்து விரல்வழியே
கொட்டும் மனத்தைச் சமர்ப்பித்து
கோதித் தலையை முதுகினிலே
தட்டி அணைத்து ஒருவாயே
சாதம் ஊட்டி விழிவாசல்
முட்டும் கண்ணீர்க் கணைபோட்டு
மூன்று நிமிடம் முன்னால்தான்

நடுங்கும் கையும் தொண்டைக்குள்
நசுங்கிப் போகும் மழலையுமாய்
இடுங்கிப் போகும் கண்ணிலொளி
என்னைப் பார்த்துச் சிதறுவதாய்
மடியில் தலையைக் கிடத்தியதால்
மலர்ந்த மனமும் கொண்டவளை
'படும்மா' என்று கரகரத்தேன்.
பாதம் பற்றிக் கண்சேர்த்தேன்.

என்னைச் சுமந்த என்ஜனனி
இன்று தளர்ந்தாள் அசையாமல்.
முன்னம் சுமந்த தன்னுயிரை
மூடிக் கண்ணுள் வைத்தபடி
சின்னக் குழந்தை எனக்கான
தேவதை அங்கே தூங்குகிறாள்.
அன்னை அங்கே உறங்குகிறாள்
அம்மா இன்னும் எத்தனைநாள்.

My Grand Mother - Amamma

This is for my grand mother who took time to chisel me😊
 My Grand Mother-Amamma

She had been to me a shadow
That could rise and give me shade.
Though like an autumn meadow
Her smiles had begun to fade,
My treasure lay in her eyes
That softly peered to know my pains.

I only saw a child disguised-
She saved only to give away-
Her life had been a prop to woes
Of all that went into her sway.
Her knowledge was but to suppose
That health and wealth were two supports
For life to lean and to relax
And wait for storms to go away.
Her eyes had drunk a lot of tears;
I had not seen them reach her cheeks.
Hers were always silent fears
That liked to fight but not go meek.
Her lap had lulled me into sleep;
Her lips had lashed me back to light;
I had basked beneath her care,
With never a want or woe to fight.
Some moody days sent her back,
To memories of her yesterdays-
With beady eyes she would relate
That Luck refused to come her way;
Of every twist in her punishing fate
She told me, moulding me like clay.
Though protected I am, unlike her,
Cautious do I tread till date.
A lifetime's woes she passed on to me
And made me richer, every way!
"When I'm gone, will you think of me?"
Amamma, yes, now and all the way!


அம்மா...



அம்மாவுக்கு இறுதி விடை கொடுத்து வீடு திரும்பியாச்சு!
பாசம், பரிவு, அன்பு என்று இளகிய மனமும், இரும்பு போன்ற மன உறுதி,வைராக்கியம், பிடிவாதம், தான் கொண்ட கொள்கையில் பிடிப்பு என்ற இறுக்கமும், ‘கண் பார்த்தால் கைசெய்யும்’ என்ற அளவில் எந்த ஒரு கைவினையையும் சுலபமாகக் கற்றுத்தேறும் ஆர்வமும்-

ஓர் அபூர்வக் கலவை அம்மா!.

பொருளாதார வசதி குறைவாய் இருந்த காலகட்டங்களிலும், எப்போதும் வீட்டுக்கு எத்தனை விருந்தினர் வந்தாலும், அத்தனை பேருக்கும் சுவையான உணவு இருக்கும். பண்டிகை நாட்களிலோ ‘குறைவொன்றும் இல்லை கோவிந்தா’ தான்! தீபாவளி என்றால் உள்ளாடை முதல்,கர்சீப் வரை எல்லாருக்கும் புதிதாக அடுக்கப்பட்டிருக்கும். 2 ஸ்வீட், 4 காரம், லேகியம் என்று அனைத்தும் வீட்டிலேயே தயாராகும்.

உழைப்புக்கு அஞ்சாத அம்மா!

தையல் கலையில் தேர்ச்சிபெற்று, மயிலையில் ஒரு மாதர் சங்கக் கூட்டுறவு அமைப்பில் சேர்ந்து, ஸ்கூல் யூனிஃபர்ம் போன்ற ஆர்டர் எடுத்து, வீட்டில் தைத்துக் கொடுத்து அந்த சிறு வருமானத்தையும் வீட்டுப் பொருளாதாரத்திற்கு முட்டுக் கொடுத்து-

தன் நேரத்தை வீணாக்காத அம்மா!

அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளையும், எங்கள் நண்பர்களையும் தன் மக்களாகப் பாவித்து அன்புகாட்டும் மனம். ஒருமுறை பக்கத்து வீட்டுப் பெண்குழந்தை (வயது3) வீட்டிலிருந்த தூக்க மாத்திரைகளை மிட்டாயென்று எண்ணித் தின்றுவிட்டுத் துவண்டு தலைதொங்க, அத்தனை பேரும் செய்வதறியாது திகைத்த போது, போட்டது போட்டபடி விட்டு, குழந்தையை அள்ளிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடி, அவள் உயிரை மீட்டு வந்த

செயல்வீராங்கனை அம்மா!

எந்த ராஜா எந்தப் பட்டினம் போனாலும், அப்பாவோடு சேர்ந்து காலை அலுவல்களுக்கிடையே லலிதாஸஹஸ்ரநாமம் தினசரி பாராயணம் செய்யும் அம்மா!

மயிலை கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி மாத ப்ரம்மோத்ஸவத்தின் முக்கியத்திருவிழாக்களுக்கு (3ஆம் நாள் அதிகாரநந்தி, 5ஆம் இரவு வெள்ளிவிடை, 7ஆம் நாள் திருத்தேர், 8 ஆம் நாள் அறுபத்துமூவர், அன்றுமாலை வைரமுடி சேவை) வருடம் தவறாமல் அழைத்துச் செல்லும் அம்மா!

வீட்டுப் பொருளாதாரச் சிக்கல்களுக்கு நடுவே எங்கள் வாழ்க்கைத்தரத்தை மெல்லமெல்ல முன்னேற்றி, ஒரு சொந்தவீடு என்ற கனவைத் திட்டமிட்டு நனவாக்கிய அம்மா!

1967ஆம் ஆண்டு, எனக்குப் பொறியியல் படிப்புக்காகக் கோவையில் கிடைத்த உத்தரவை, ஒரு குடும்ப நண்பருடைய உதவியுடன் தொழில்நுட்பப் படிப்பின் இயக்குனரைச் சந்தித்து கிண்டி கல்லூரிக்கு மாற்றல் வாங்கித் தந்த அம்மா!

1973 ஆம் வருடம், பிள்ளைகள் நாங்கள் வாழ்க்கையில் காலூன்றாத நிலையில் அப்பா திடீரென்று காலமானபோது, எங்கள் வாழ்க்கைப் படகு தத்தளிக்காமல் தேர்ந்த மாலுமியாகச் செயல்பட்டு எங்களைக் கரை சேர்த்த அம்மா!

தனக்குக் கிடைத்த குடும்ப ஓய்வூதியத்தொகையை, சேமித்து வைத்து அதைக் கண்ணும் கருத்துமாகத் துல்லியமாகக் கணக்கிட்டுத் தன்பிள்ளைகளுக்கும், பேரன், பேத்திகளுக்கும், அவ்வப்போது தவறாமல் பங்கீடு செய்யத் தவறாத அம்மா!

தன்மக்கள் நலம் வேண்டி, தன் உடல் வருத்தி, உப்பில்லாத உணவும், உணவே இல்லாத நோன்புமாகத் தன் வாழ்வைத் தியாகவேள்வியாக வாழ்ந்த அம்மா!

நான் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அறுவை சிகித்சைக்காக அனுமதிக்கப்பட்ட நாட்களிலும், என் ஐமபது வயதில் அம்மையின் வெம்மையால் வீழ்ந்தபோதும், இரவு பகல் பாராமல் என்னை அருகிருந்து அகலாமல் காப்பாற்றிய அம்மா!

கால்மூட்டுகள் தேய்ந்தபோதும், 75 வயதில் அதற்குப் பயிற்சி கொடுக்க, எக்ஸர்சைஸ் ஸைக்கிள் வாங்கிப் பயிற்சி செய்த அம்மா! தன் கடைசிகாலங்கள் வரை தன் வேலையைத்தானே பார்த்துக் கொள்வதென்ற பிடிவாத அம்மா!

நினைவு மழுங்கிய இறுதி நாட்களிலும் பயிற்சி தரவந்த ஃபிஸியோ தெரப்பிஸ்டிடம் “Don’t Touch me; self Help is the Best Help”என்று சொல்லி அசத்திய அம்மா! “என்னை என் அம்மா அழைக்கிறார்; ஆனால் நான் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டேன்” என்று திடமாக எமனை எதிர்த்துப் போராடிய அம்மா!

அம்மாவைப் பற்றிய நினைவுப் பதிவுகளுக்கு ஏது எல்லை!

அம்மா,சிறுவனாக இருந்த நாட்களில், எங்களை வீட்டில் விட்டுவிட்டு, அப்பாவோடு மாலையில் வெளியில் செல்லும் நீங்கள் வீடுதிரும்ப நேரமானால், தவித்துத் தவித்து, வந்தவுடன் தாவிஅணைத்து ஆறுதல் பெறுவேனே, அம்மா-

இன்றைக்கு….?

சு.ரவி

Saturday, February 13, 2016

Kuyilin kural by Sundara

ஒற்றைமரப் பூங்குயில்தன்
உதிரம் குரலாக்கி
ஓலமிடும் பாட்டிலதன்
உள்ளம் தெரிகிறது!
மற்றவனக் குயில்களெங்கே!
விட்டுவிட்டுப் போயினதோ?
விட்டுவிட்டுப் போனதனால்
சிட்டுக்குயில் வாடியதோ?

கூவி யழைக்கிறதோ!
கொடுந்தனிமைப் புழுக்கமிதோ?
கூவியழைத்து மெதிர் குரலொலிக்கக் கேளாமல்
பாவித் தனிக்குயில்தன்
பாட்டால் அழுதிடுதோ!

கேள்விகளை எழுப்புகின்ற
கேவல் குரல்சுகத்தால்
பதிலறியும் ஆவலுற்றுப்
பாஷைகற்க முயல்கிறேன்!

குயில்பாஷை அறிந்தோரென்
குருவாக முன்வந்தால்
பயில்வேன் உடனடியாய்
பாட்டெடுப்பேன் முதற்படியாய்!

என்றுசில வாறெல்லாம்
எண்ணமுற்ற நாட்களிலே
தற்செயலாய் எதிர்ப்பட்டக்
கண்ணாடி பிம்பமதில்

சோக வரி ஓடுகிற விழியும்
ஓர்சிற குமுடை
காகநிறக் குயிலாயெனைக்
கண்ணாடி காட்டுகையில்

கூ கூ கூ என்றென்
குரல்மாறிப் போனது ஏன்?

நிலா - Shobana Ravi

நிலாவைப் போலே ஒரு நீலமான பிம்பம்
தடாகமானேன் அதில் தங்கமாக மின்னும் - நிலாவைப்
போலே

புல்லாங்குழல் ஒலி அதில்  தள்ளாடும் என் மொழி
வண்டாடும் மலர்வனத்தின் வாசல் உன் விழி - கண்ணா
என்
தெய்வ நேயமே  என் வேதமே
உன்னால் உயிர்த்ததிந்த உள்ளமே -       நிலாவைப் போலே ........

ஒரு ஜ்வாலையுள் வைத்தாய் என்னை
உன்  பார்வையில் வைத்தாய்
நில்லாத காற்றையும் ஒரு
நீதி சொல்ல வைத்தாய் -கண்ணா
என்
உணர்வில் மென்மையே
என் உண்மையே
நீயின்றி என்றுமே நான் இல்லையே  நிலாவை போலே ......

(1985)

பௌர்ணமி இரவில் - Santhome Beach

 
 


வானமெனும் ஆற்றினிலே ஓடிவரும் ஓடம்
தேனமுதைத் தேவரெலாம் பூட்டிவைக்கும் மாடம்
அலைகளெறியுமொரு
கடலை அணையவரு
நிலவு இதனொளியில்
உலவி உலவி மனச்
சாந்தி பெறச் சற்றினிதே நான்நினைத்தபோது
தான்வருவாள் தளிர்நடையில் இயற்கையெனும் மாது!

Photo :  Srinivasan Ka   
Kavithai :  Su Ravi





எக்காலம் - Sundaraa

ஓர்சுருதி லயம்வாய்த்த உயரடியார் கூட்டத்தில்
வேர்பிடித்து யானுமதாய் விளங்குவது மெக்காலம்?

தேரில் வடம்பிடித்து
தெய்வத்தைக் கூட்டிவந்து
நாரில் மலர்தொடுத்து
நான்மணப் தெக்காலம்?

அழுகை, வெகுளி, மன
ஆற்றாமை என்பதெல்லாம்
பழகும் பரமனுக்கே
படைப்பதுவு மெக்காலம்? 

எதுமேல் எதுமேலே
எனக்கேட்கும் குழுவுக்குள்
மதவேள் படைப்பழிப்பில்
மயங்குவது மெக்காலம்!

****





அழகார்ந்தநாயகி பஞ்சகம்

அழகார்ந்தநாயகி பஞ்சகம்

 அழகினுக் கழகைத் தந்த
     அழகியே, அம்மை யே!பூம்
பொழிலிடைப் பூந்துருத்திப்
      பொய்யிலி நாதர், கையில்
மழுவினை, மானை ஏந்தும்
       மன்னவன் பாகம் கொண்டோய்!
பழவினைக் காட்டைத் தீய்க்கும்
        பதமலர்    சரணம்   தாயே!    1

 தேவியே, மறைகள் நான்கும்
          தேடுமெய்ப் பொருளே! ஈசன்
ஆவியே, அமுதம் தோய்ந்த
        அழகியே, அரனார் பாகம்
மேவிய மேன்மையே நின்
        மென்மலர்ப் பாதம் பாக்கள்
தூவிநான் தொழுது போற்றத்
         துணைவர வேண்டும் தாயே!    2

 பிரமனங் கிருக்க ஒட்டான்
           பிறப்பெனும் சிட்சை செய்வான்!
இரக்கமில் எமனோ என்னை
          இவ்விடம் இருக்க ஒட்டான்!
உரமழிந் தோய்ந்தேன்,தேய்ந்தேன்
         உதையுறு பந்தாய் ஆனேன்!
அரனொரு பாகம் சேர்ந்த
           அழகியே, சரணம் தாயே!       3

 பொன்னிலே விருப்பம் இல்லை
            பொருளிலே நாட்டம் இல்லை
உன்னையன் றின்றி யாரும்
           உறவெனக் கில்லை அம்மே!
இன்னமு தழகீ! ஈசன்
           இடப்புறம் கவர்ந்த தாயே!
மின்னலாய் முதுகுத் தண்டின்
          மிசையெழு சுடரே!போற்றி!        4

 பூரண நிலவாய்ப் பூத்த
         பூவன நாதர் வாழ்வே!
நீறணி நிமலர் பாகம்
         நிறைவுசெய் அழகீ! அன்ன
பூரணீ! புதுமைக் கெல்லாம்
          புதுமையே! உலகுக் காதி
காரணீ! காளீ! காக்கும்
        கழலிணை சரணம் தாயே!         5

சு. ரவி

 

 


Fresh morning

Oh! Feeling fresh
All around me green and lush
In myriad hues a 'Beauty-rush'
A song, a word, a hush!
All the notes in harmony
The morning light drips honey
A bird comes to perch on my mind
On or in a way it'll find
Let me sink, nay, merge in this
Is it not the eternal bliss!

KA.Ravi

Vinaayakar of Halabeedu

Test for post of a drawing sent
Su.Ra

Friday, February 12, 2016

காஞ்சிப் பெரியவர் - தண்டமிழ்க் கொண்டல்

"நடமாடும் தெய்வமாய் நம்மிடை விளங்கிடும்
நற்காஞ்சி பெரிய வர்க்கே
நன்றான என்பதாம் ஆண்டென் றமைந்ததால்
நாடெங் கிலும் விழாவே
இடமான மயிலையில் இனிதான சங்கர
மடத்திலே கவிதாஞ்சலி
எட்டேழு எழுபத்தி மூன்றான நாளிலே
எடுக்கிறோம் அறிகு வீரே
அடவான பதிலொன்று வருமென் றெண்னியே
அச்சுக் கனுப்பி விட்டொம்
அன்புரிமை ஆதலலால் அளவுமிகு** காதலால்
அழைக்கிறோம் வருகு வீரே"

 காஞ்சிப் பெரியவர் 80 அகவைக் கவியரங்கில் பங்கேற்க தண்டமிழ்க் கொண்டல் அனுப்பிய கவிதைக் கடிதம் இது என்று தம் நினைவில் இருந்து எடுத்துத் தருகிறார் கவிமாமணி பா.வீரராகவன்.

** அளவற்ற
[22:04, 2/12/2016] +91 98400 49060+91 98400 49060:  என்று திருத்திக் கொள்க்.

குப்பாச்சுலு-கோடபட்ரி - ''கிரேசி'' மோகன்

சின்ன நாடகம்....கோமல் ஸ்வாமினாதன் குங்கும் ஆசிரியராக இருந்தபோது எழுதியது....நேரம் கிடைக்கும் போது படிக்கவும்....(வாட்ஸ் -அப்பில்’’ வாசிப்பது கஷ்டம்தான்....)....          

குப்பாச்சுலு-கோடபட்ரி
 ------------------------------
மாமியாரும்-மருமகளும்
-------------------------------
பிற மொழி நாடகம்
மூலம்-மூதாதையன் ''இன்கமோ சிரேகி''
தமிழில்-''கிரேசி'' மோகன்....

 காட்சி 1 :

       காலம்  :  பாறாங்கற்காலம் (கற்காலத்திற்கும் முந்திய காலம்.)

       இடம்  :  மிருக நடமாட்டமே இல்லாத பயங்கரமான காட்டின் ஒரு பகுதி. (மிருக நடமாட்டம்
                இல்லாததற்குக் காரணம்...  இங்கு அவைகளைவிட பயங்கரமான நமது மூதாதையர்கள்
                இருந்தார்கள்.)

 பாத்திரங்கள்  :  கதாநாயகி 'பிடாரி'யின் தந்தை 'இடும்பன் காட்டேரி, 'கதாநாயகியை ஐம்பது மாதம் வயிற்றில்
                சுமந்து பெற்ற (நமது மூதாதையர்கள் நம்மைவிட எதிலும் ஐந்து மடங்கு அதிகமாகவே
                இருந்தார்கள்.) தாய் 'இருளச்சி,' மற்றும் அக்கம்பக்கத்து காட்டு மிராண்டிகள். இது தவிர இவர்கள்
                செல்லமாக வளர்க்கும் யானை, மலைப்பாம்பு, காண்டாமிருகம், டயனாசரஸ் போன்ற மிருகங்கள்
                அங்கு சுவாதீனமாக அலைந்து கொண்டிருந்தன.

                கதாநாயகியின் தந்தை 'இடும்பன் காட்டேரி' தாழ்வான ஒரு மரக்கிளையில் கன்னத்தில்
                கைவைத்தபடி தலைகீழாகத் தொங்கிக்கொண்டு முன்னும் பின்னும் சோகமாக ஆடிக்
                கொண்டிருக்கிறான்.

                தனது எஜமானரின் சோகமான மனநிலையைப் புரிந்து கொள்ள முடியாத, ஐந்தறிவு படைத்த
                நீர்யானை ஒன்று அப்போது அங்குவந்து 'இடும்பன்காட்டேரி'யை விளையாட்டாகச் சீண்டிவிட,
                அதனால் கோபமுற்ற இடும்பன் காட்டேரி நீர்யானையின் கன்னத்தில் பளாரென்று அறைய நீர்
                யானை அழுதுகொண்டே கண்ணீர் யானையாக மாறி ஓட்டம் பிடித்தது.

                கணவனுக்காக ஆசையாக ஒரு முழு காட்டெருமையை அலட்சியமாகக் கொம்பைப்
                பிடித்தவண்ணம் காட்டுத் தீயில் 'ரோஸ்ட்' செய்து கொண்டிருந்த இடும்பன் காட்டேரயின்
                மனைவி இருளச்சி - நீர்யானையின் அழுகுரல் கேட்டு ஓடிவருகிறாள்.

          இருளச்சி  :  (பூமி அதிர ஓடி வந்து) இன்னிக்கு என்னாச்சு உங்களுக்கு? ஏன் இப்படி
                       காலைலேந்து சிடுசிடுனு இருக்கீங்க. அக்கம்பக்கத்துல உள்ளவங்கள்ளாம்
                       தப்பா நெனைச்சுக்கப்போறாங்க... (என்று அவளால் முடிந்த வரையில் தாழ்வான
                       குரலில் கேட்க, அந்த சத்தத்திற்குப் பயந்தே பறவைகள் எல்லாம் சிறகடித்து
                       கூட்டுக்குள் ஒளிந்தன.)

 இடும்பன் காட்டேரி  :   என்னை ஒண்ணும் கேக்காத. எனக்கு மனசு சரியில்லை! (என்று கோபமாகக்
                       கூறிவிட்டு தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தவன் மணிக்கு முந்நூறு
                       கிலோமீட்டர் வேகத்தில் முன்னும் பின்னும் வெறித்தனமாக ஊஞ்சலாட
                       அவனது ஆட்டத்தைத்தாங்க முடியாமல் அந்த பிரும்மாண்டமான ஆலமரம்
                       வேரோடு பிடுங்கிக் கொண்டு கீழே சாய்ந்தது.)

         இருளச்சி  :  கீழே விழுந்த ஆலமரத்தை ' நாளை அடுப்பெரிக்க உதவும் ' என்ற எண்ணத்தில்
                      அதை நான்காக உடைத்து ஒரு ஓரமாகப் போட்டுவிட்டு, கீழே விழுந்ததால்
                      கணவனின் உடம்பில் படிந்த புழுதியைத் தட்டிவிட்டவண்ணம்) உங்களுக்கு மனசு
                      சரியில்லேன்னு எனக்கு அப்பவே தெரியும்...

 இடும்பன் காட்டேரி  :  எப்படி? (என்று உரத்த குரலில் கர்ஜிக்க,)

         இருளச்சி  :  (கணவனின் கூச்சல் தாங்காமல் தனது இரு செவிகளிலும் உடைந்த ஆலமரக் கிளையை
                      நுழைத்துக்கொண்டு) சேச்சேச்சே...  ஏன் இப்படி காட்டுமிராண்டியாட்டம் கத்தறீங்க?
                      உங்க கவலை என்ன? மொதல்ல அதைச் சொல்லுங்க.

 இடும்பன் காட்டேரி  :  என்ன இருள்... ( இருளச்சியை செல்லமாக இருள் என்று சந்தோஷத்தில் அழைப்பது
                      வழக்கம்) நீயும் புரியாம பேசற...  வர வைகாசியோட நம்ப பொண்ணு பிடாரிக்கு
                      (கதாநாயகி) நூத்து ஐம்பது வயசு முடியறது. அவளை பொறுப்பா ஒத்தன்கிட்ட
                      கல்யாணம் கட்டிவச்சுட்டா நானும் மீதி இருக்கிற சொச்சநச்ச இருநூறு வருஷத்தைத்
                      தள்ளிட்டு கண்ணை மூடலாம்னு பாத்தா, பிடாரிக்கு ஒரு வழி பொறக்க மாட்டேங்குதே,
                      அதான் கவலையாயிருக்கு...

          இருளச்சி  :  பூ... இவ்வளவுதானா (என்று கூறி காரித் துப்புகிறாள். அப்பொழுது அவள் துப்பிய
                      உமிழ் நீர் அங்கு ஒரு ஓடையாக மாறி ஓடுகிறது.

                      அப்பொழுது கதாநாயகி பிடாரி தனது இரு கைகளாலும் ஒரு காட்டு யானையின்
                      தும்பிக்கையைப் பிடித்து கரகரவென்று தட்டாமாலை சுற்றிக்கொண்டே வருகிறாள்.

                      பிடாரி, மாதா பிதாவைப் பார்த்த சந்தோஷத்தில் வேகமாகச் சுற்றிக் கொண்டிருந்த
                      யானையின் தும்பிக்கையை விட, யானை எட்டு மைல் தள்ளி அதே வேகத்தில்
                      போய் விழுகிறது.)

 இடும்பன் காட்டேரி  :  என்னம்மா பிடாரி, இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி விளையாட்டுப்
                      பொண்ணா இருக்கப் போற... உன்னை கல்யாணம் பண்ணிக் கொடுத்து ஒத்தன்
                      கைல ஒப்படைச்சுடறதா நானும் உங்கம்மாவும் முடிவு பண்ணியிருக்கோம். நீ என்ன
                      சொல்ற?

            பிடாரி  :  போப்பா... எனக்கு வெக்கமா இருக்கு. (ஏற்கனவே அட்டைக்கரியாய் இருந்த அவள் முகம்
                      நாணத்தால் மேலும் கருக்க, தனக்குத் திருமணம் என்று பெற்றோர்கள் தன் எதிரிலேயே
                      குறிப்பிட்டதால் உண்டான கூச்சத்தில் அந்த இடத்தை விட்டு எழுந்து ஓட ஆரம்பித்தாள்.)

 இடும்பன் காட்டேரி  :  ம்... பாவம் அறியாப்பொண்ணா இருக்கா நம்ம பிடாரி. நாளைக்கு புருஷன் வீட்டுல
                      போய் எப்படித்தான் குப்பை கொட்டப் போறாளோ! ம்... (என்று கூறி பெருமூச்சுவிட,
                      அவன் நாசியிலிருந்து புறப்பட்ட சுவாசக்காற்று அங்கு தற்காலிகப் புயலாகச் சில
                      நிமிடங்கள் வீசுகிறது.)

         இருளச்சி  :  ஏண்ணா...  உங்க பிரண்டு ஒத்தர் பக்கத்து காட்டுல இருக்காரே அவர் பேர் என்ன?

 இடும்பன் காட்டேரி  :  யாரைச் சொல்ற? (குழப்பத்தால் தனது பரட்டைத் தலையை அவன் சொரிந்து கொள்ள,
                      தலைமுடிக் கொத்திலிருந்து பல்லி, தேள், கரப்பான்பூச்சி போன்ற சிறு சிறு ஜந்துக்கள்
                      குதித்து ஓடுகின்றன்.)

         இருளச்சி  :  அதாங்க... ஆளுகூட குள்ளமா முப்பது அடி உசரத்துக்கு தக்கூனூண்டுக்கு இருப்பாரே....

 இடும்பன் காட்டேரி  :  யாருடி நம்ப பிரம்மராட்சஸனை சொல்றியா?

         இருளச்சி  :  அவரேதான். அவர் பையன்கூட கோரஸ்வரூபன்கற பேருக்கேத்த மாதிரி பாக்க லட்சணமா
                     இருக்கான். மத்த பசங்க மாதிரி தறுதலையா இல்லாம சமத்தா தினமும் வேட்டையாடி
                     கைநெறைய புலி, சிங்கம், கரடினு சம்பாதிக்கறான். நம்ப பிடாரியை அவனுக்கு கட்டி
                     வச்சா பொருத்தமா இருக்கும்.

 இடும்பன் காட்டேரி  :  நீ சொன்னா சரிதான். தோ இப்பவே போய் பிரம்மராட்சஸனைப் பாத்து கல்யாணம் பேசி
                      முடிச்சுடறேன். சுபஸ்ய சீக்கிரம்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க... (என்று கூறிவிட்டு
                      இருந்த இடத்திலிருந்தே ஒரு குதி குதித்து இடும்பன் காட்டேரி பக்கத்துக் காட்டிற்குத்
                      தாவுகிறான்.)

காட்சி - 2

 இடம்  :  உயரமான ஒரு ஆலமரத்தின் உச்சியில் பிரம்மராட்சஸனின் வீடு.

   பாத்திரங்கள்  :  பிரம்மராட்சஸன், அவன் மனைவி அசுரபுஷ்டி நாயகி, இடும்பன் காட்டேரி.
  (திருமணப் பேச்சு வார்த்தை நடக்கிறது.)

 இடும்பன் காட்டேரி  :  முடிவா நீங்க என்ன சொல்றேள்?

    அசுரபுஷ்டிநாயகி  :  தோ பாருங்கோ, உங்க பொண்ணுக்கு என் பையனை தரதுல எனக்கு ஆட்சேபணை  
                      இல்லை. ஆனா நீங்க வரதட்சணையா நாப்பத்துரெண்டு யானை, முப்பது சிங்கம், இருபத்து
                      நாலு புலி தரணும். இது தவிர கல்யாணத்துக்கு எம் புள்ளையோட பிரண்ட்ஸ்லாம்
                      வருவா. அவாளுக்கு மட்டும் எப்படியாவது முகூர்த்தத்தும்போது தனியா பந்திபோட்டு
                      'நரமாமிசம்' போட்டுடுங்கோ. ஜான்வாசம் ரத்தவிளாரி அம்மன் கோவில்லேந்து வச்சுக்கறதா
                      இருக்கோம். ஜான்வாச ஊர்வலம்னா மெதுவாகத்தான் நகரணும். எப்படியாவது சிரமப்பட்டு
                      கடல் ஆமையை ஊர்வலத்துக்கு அழைச்சிண்டு வந்துடுங்கோ.

 இடும்பன் காட்டேரி  :  நீங்க சொன்னதெல்லாம் எப்படியாவது தலையை அடமானம் வச்சாவது தந்துடறேன். அந்த
                      வரதட்சணையை மட்டும் நீங்க குறைச்சுக்கணும். இப்ப இருக்கற வெலைவாசில இருபத்தி
                      நாலு புலி கொஞ்சம் கஷ்டம்னு எனக்குப் படறது. நானும் எம் பொண்ணு கல்யாணத்துக்காக
                      எப்படியோ கஷ்டப்பட்டு வேட்டையாடி நீங்க சொன்ன யானை, சிங்கம்லாம் சேர்த்து
                      வச்சுட்டேன். புலி வேட்டை இப்பல்லாம் ரொம்ப அபூர்வமா போயிடுத்து உங்க புருஷனுக்கே
                      தெரியும். என்கிட்ட இப்பசத்திக்கு இருபது புலி இருக்கு. மீதி நாலு புலிக்கு பதிலா எட்டு
                      காட்டுப் பூனையை தந்துடறேன். பாக்க புலிமாதிரியே இருக்கும்.

    அசுரபுஷ்டிநாயகி  :  அதாவது சுத்தி வளைச்சு அசல் புலிக்கு பதிலா எவர்சில்வர் புலியை என் தலைல கட்டப்
                      பாக்கறீங்க, இல்லியா. தோ பாருங்கோ, நான் சொன்னதெல்லாம் கொடுக்கற பட்சத்துல
                      நாம மேற்கொண்டு கல்யாணத்தைப்பத்தி பேசலாம். அப்புறம் உங்க இஷ்டம். (தனது
                      கோபத்தைக் காட்ட பல்லை நரநரவென்று கடித்து ஒஸிபிஸா சத்தம் உண்டாக்குகிறாள்.)

 இடும்பன் காட்டேரி  :  மன்னிச்சுக்கணும். தெரியாம பேசிட்டேன். எப்படியாவது இருபத்துநாலு புலியை
                      கல்யாணத்துக்குள்ள தேத்திடறேன்! (என்று கூறிவிட்டு தாழ்வான குரலில் தனக்கு மட்டும்
                      கேட்கும்படி பேசுகிறார். சேத்தரி... என்னிக்குத்தான் இந்த வரதட்சணைக் கொடுமை
                      ஒழியுமோ!

 காட்சி - 3

இடம்  :  வசதி படைத்தவர்கள் மட்டும் திருமணம் நடத்தும் 'பாழும் குகைச் சத்திரம்'.

பாத்திரங்கள்  :  மணமக்கள், அவர்களுடைய பெற்றோர்கள், மற்றும் அண்டை அசல் காட்டிலிருந்து
திருமணத்திற்கு வந்துள்ள காட்டு மிராண்டிப் பெரியவர்கள்...

பிடாரி-கோரஸ்வரூபன் திருமணம் நடக்கிறது. வந்தவர்கள் எல்லோரும் தங்கள்
சக்திக்கேற்ப ஆடு, மாடு, புலி, கரடி என்று மணமக்களுக்கு பரிசாக 'மொய்'
எழுதுகிறார்கள்.

மணமகள் பிடாரியின் கழுத்தில் தாலி கட்டி மூன்று முடிச்சு போடும் சமயத்தில் மணமகன்
கோரஸ்வரூபன் மூன்றாவது முடிச்சை சுபாவமான வெறியில் இறுக்கமாகப் போட, அதனால்
மூச்சுத் திணறிய பிடாரி '' குய்யோ முறையோ '' என்று மங்களமாகக் கூவுகிறாள்.

காட்சி - 4

இடம்  :  கோரஸ்வரூபன் வீடு.

பாத்திரங்கள்  :  கோரஸ்வரூபன், புது மனைவி பிடாரி, பிடாரியின் மாமியார்க்காரி அசுரபுஷ்டி நாயகி.
(கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே ஆரம்பித்துவிட்ட மாமியார்-மாட்டுப்பெண் மோதல்
இங்கும் அவர்களுக்கே உரிய பாணியில் நடக்கிறது.

கோரஸ்வரூபன், அறையின் நடுவில் கோடரியால் வெட்டப்பட்டவனின் மரண ஓலம் போல
பயங்கரமான சப்தத்தோடு குறட்டை விட்டவண்ணம் ஆழ்ந்த நித்திரையிலிருக்கிறான்.
அப்போது அவனது தாய் அசுரபுஷ்டிநாயகி தலைவிரிகோலமாக ஓடி வந்து தனது மகனை ஒரு
உதை உதைத்து எழுப்புகிறாள்.)

 அசுரபுஷ்டிநாயகி  :  அடேய் கோரஸ்வரூபா! உம் பொண்டாட்டி செஞ்ச காரியத்தை பாத்தியா... என் தலைல
                   குட்டிட்டாடா! (தலையைக் காட்டுகிறாள். பிடாரி குட்டிய இடத்திலிருந்து ரத்தம் பெருகி
                   ஓடுகிறது.)

          பிடாரி  :  (ஓடிவந்து) ஒண்ணுமில்லை. நான் லேசா குட்டினதுக்கே உங்கம்மா இப்படி அமக்களம்
                    பண்ணறாளே! இவங்க செஞ்ச சில்மிஷத்தை பாருங்கோ! (என்று கூறி உள்ளங்கையைக்
                    காட்டுகிறாள். அதில் பிடாரியின் அறுந்த காது இருக்கிறது.) உங்கம்மா என் காதை
                    அறுத்துட்டாண்ணா! (என்று கூறி ஓலம் இடுகிறாள்.)

  அசுரபுஷ்டிநாயகி  :  நான் என்ன வேணும்னா இவ காதை அறுத்தேன். எம் முதுகுல இவ கத்தியால குத்திட்டாடா.

           பிடாரி  :  நம்பாதீங்கோ. உங்கம்மா பொய் சொல்றா.

   அசுரபுஷ்டிநாயகி  :  எனக்குத் தெரியும். நீ இப்படிச் சொல்லுவேன்னுதான் நான் முதுகுல குத்தின கத்தியை
                     எடுக்காம அப்படியே வச்சிருக்கேன். நீயே பாரு! (என்று கூறி முதுகைக்காட்ட அங்கு மூன்று
                     அங்குல ஆழத்திற்கு ஒரு பிச்சுவா பதிந்திருக்கிறது.)

     கோரஸ்வரூபன்  :  சேச்சே.... பொழுது விடிஞ்சு பொழுது போனா எப்பப் பாரு உங்க சண்டையைக் கேட்டுக்
                      கேட்டு புளிச்சுப் போச்சு. ஏண்டா வீட்டுக்கு வரோம்னு இருக்கோம். இதெல்லாம்
                      பாக்கறச்சே பேசாம 'ஆபீசே' கதின்னு அங்கயே பழியா கிடந்துடலாம் போலருக்கு.

     அசுரபுஷ்டிநாயகி, பிடாரி (இருவரும் ஒரே சமயத்தில்) ஆபீசா! அப்படீன்னா என்ன அர்த்தம்?

 கோரஸ்வரூபன்  :  எவனுக்குத் தெரியும் அர்த்தம். ஏதோ விரக்தில சொல்லணும்னு தோணித்து சொன்னேன்.

      பின்குறிப்பு  -  கோரஸ்வரூபன், மாமியார் - மாட்டுப்பெண் சண்டையால் வெறுத்து உச்சரித்த 'ஆபீஸ்'
                    என்ற வார்த்தை நாளடைவில் பிரபலமாகி பலராலும் பேசப்பட்டது. வீட்டில் பிடுங்கல்
                    காரண்மாக நிம்மதியாகத் தூங்க முடியாமல் தவித்த மனிதன் அன்று முதல் வெளியில்
                    'ஆபீஸ்' என்ற பெயரில் ஒரு ரம்மியமான இடத்தைத் தோற்றுவித்து பகல் நேரங்களில்
                    செளக்கியமாகத் தூங்க ஆரம்பித்தான்.


    (முடிவு)      
       
                                                                                                     

The Angel Of Time - Ajith

The Angel Of Time

I have started to meet her face to face quite a lot these days.
Gone are the days I tried to fight, and now I have learned to embrace.
As Luck, as fate, as destiny; By multiple names she is known,
An angel of time, in the way I see, she descends from the big man's throne.

Like a wave she comes to sweep me off my feet,
Her troughs are tough but her crests are sweet!
She is the harbinger of both joy and sorrow as many say,
The angel of time, that which she is, she always leads my way.


There are always dots that we forget to connect in the past,
She is always there to connect it before we breathe our last
"I make it all happen for a reason" she always quips,
And she is always there to make sure the good and bad flips.

 The hardest is when she plucks people away from me;
"Its time. Accept" she says, and alone she lets me be.
I wish it wasn't and the void I refuse to believe!
I cry and cry and I finally accept that it was time for them to leave.

She taught me to share my joy and to laugh in my sorrow,
She taught me to live my life like there is no tomorrow!
To get used to the angel in her, it took some years for me.
She comes galloping on the golden horse of time and always sets me free.

கால தேவதை


விரிவெளியும், தொடர் காலமும் மனித மனத்திற்கு அடங்காத வியப்புகள்.

முதலும் முடிவும் இன்றி வரையிலிகளாக இவை படரந்து பட்டிருக்கின்றன.ஒன்றில்லாமல் மற்றதைப் புரிந்து கொள்ளவும் ஏலாது!

விரிவெளியில் கட்புலனுக்கு வசப்படாமல் அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது காலநதி.

அரசனே ஆயினும், ஆண்டியே ஆயினும்
ஒருவருக் காகவும் ஓய்ந்து நிற்காது.
திசையினை மாற்றித் திரும்பி ஓடாது
கடந்த பாதையின் சுவடுகள் மட்டும்
மனவெளிப் பரப்பில் காலடித் தடங்களாய்..
போகும் பாதையோ அவரவர் நெஞ்சின்
கற்பனை, கவலை, ஆசைக ளாக…
கால நதிக்கரை தெளிவுறக் காட்டுவ(து)
'இதோ, இந்தத் தருணம்' மட்டுமே!
இத்தரு ணத்தில் சித்தம் குவித்து
இருக்கத் தெளிமின்! கால தேவதை
கட்டி யணைத்துக் காதல் செய்வாள்!
போனதை எண்ணிப் புலம்பவோ அன்றி
வருவதை எண்ணிக் கலங்கவோ வேண்டா!

(Ravi Subramanian)


எது கவிதை.. - K Ravi

நாம் கவிதைகளை அதிவேகமாகக் கடந்து சென்றுவிடுகிறோமோ? பேருந்து புறப்படும் நேரத்தை நெஞ்சில் நிரப்பியபடியே பரீ நகரத்து லுவரில் மோனலிஸா ஓவியத்தை ரசிக்க மறந்துவிடும் சுற்றுலாப் பயணிகள் போல்!
கவிதையைக் கடந்து செல்ல முடியுமா? அது என்ன கால்வாயா? கடல், கங்குகரை காணாத கடலப்பா! உறங்க விடாமல் உள்ளத்தில் கனமாக உட்கார்ந்துவிடும், கண்ணீர் பெருக, உள்ளம் உருக, நெகிழ்ந்தால்தான் உயிரை ஊடுருவிச் சென்று அங்கே அது சிலையாக மலர்ந்து ஜொலிக்கும்.
கவிதை படிப்பதற்கு இல்லை, அத்துடன் வாழப் பழக வேண்டும். அதற்குத் துணிவு வேண்டும். முதலில், சு.ரவி போல் சொல்வதென்றால், அமைதி வேண்டும்.

"பிரமன் இங்கு இருக்க ஒட்டான்
பிறப்பெனும் சிட்சை செய்வான்
இரக்கமில் எமனோ என்னை
இவ்விடம் இருக்க ஒட்டான்"
இந்த வரிகள் நெஞ்சில் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டாமா?  சுலபத்தில் புரிந்து கொண்டு, சரி, சரி, வருகிறேன் என்று இந்தக் கவிதையிடம் விடைபெற்றுக் கொள்ள முடியுமா? கேசவனைச் சேவகனாக்கிய.சுந்தர நாமாவளியில் இருந்து எளிதில் மீள முடியுமா? கவிதை வெறும் விளையாட்டில்லை. அதுவே பத்ரகாளி, பராசக்தி!

"பிரமன் அங்கு"
ஒரு அட்சரம் அப்படி இப்படி மாற்றமுடியாது சாமி, அதுதான் கவிதை.

******
ஆஹா, உயர்ந்த கவிதை. நேர், நிறை என்ற பொல்லா இலக்கணம் நேர்மை, நிறை எனப்படும் கற்பு. நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம் என்று சீறினானே பாரதி!

புலனழி வதற்கே யோகம்
புனிதமாக் குவதே யாகம்
புலனழித் தொருமை யாக்கிப்
புனிதமும் ஆக்கும் நெஞ்சைக்
களவாடும் ப்ரேம பாவம்
கண்ணனைத் தழுவும் மோகம்
தளராத பக்தி ராதா
ஆண்டாள்மீ ராவின் தாகம்

கன்னத்தின் குழியி லேநீ கலங்கிவிட்டாயே தோழீ - Shobana Ravi

நிசியைப்போல் ஒளிரும் மேனி
நிலவைப்போல் குளிரும் காந்தம் 
அசையாத  சுடரொன்றைப் போல் 
அலுங்காத அழகு நெற்றி 
ஒசிகின்ற  வண்ணப் பீலி 
ஒப்பனை யாய்ய சோதை 
மசியிட்ட வயிரக் கண்கள் 
மயங்கிவிட் டாயே தோழீ 

மாயையின் மருட்சி போலே 
சுருள்சுரு ளாகக் கேசம் 
மையத்தில் வெய்யில் போலே 
சந்தனத்தின் நிவாசம் 
ஆயர்தம்  அண்ணல் எங்கள் 
ஆருயிர் அழகுக் கன்னல் 
கன்னத்தின் குழியி லேநீ
கலங்கிவிட்டாயே தோழீ 

ஆழ்கடல் தினவை யெல்லாம் 
அடக்கிவைத் தாற்போல் தோள்கள் 
பாய்விரி பசும்புல் மேலும் 
பாம்பணை துயிலும் தோற்றம் 
நேர்நிரை என்ற பொல்லா 
இலக்கணம் எல்லாம் கண்ணன் 
நேர்ப்பட்ட  பின்னிங் கில்லை 
நினைத்து விட்டாயே தோழீ

கண்ணன் - கிரேசி மோகன்


''அன்னை புரியும் அலங்காரம் பார்த்து
 என்னதான் அப்படி யோசனை! -கண்ணனே!,
’’ராதை பிறந்தாளா? காதல் புரிவாளா’’?
 ஆதலினால் தானே அலுப்பு! ‘’....


  அம்மணக் கண்ணன், அலங்காரம் செய்கையில்
  கம்மென நிற்பதன் காரணம் -நம்மனம்,
  புத்தியை, மாற்றிடும் யுக்தியாம் கீதையை
  ஒத்திகை பார்ப்பதற்க் கோ !’’.


வருடம், மாதம், தேதி, நினைவில்லை.... சு.ர இந்த ‘’யசோதா கண்ணனுக்கு அலங்காரம்’’ செய்யும்  ஓவியத்தை மெயிலில் அனுப்பியபோது அடியேன் பார்த்த பரவசத்தில் எழுதிய வெண்பாக்கள்....

...கிரேசி மோகன்....

கவிதை என்ன பொழுதுபோக்கா? - K Ravi

கவிதை என்ன பொழுதுபோக்கா? இல்லை, அது ஒரு வெறி, கோலவெறி என்பான் பாரதி. அவளுக்கு ஆட்பட்டால்தான் தெரியும் சேதி.

வார்த்தைக ளாலொரு மஞ்சம் அமைக்கக் 
கட்டளை இடுகின்றாய் 
மனமும் மனமும் தழுவிக் கொள்ள 
மௌனம் போதாதா 
உவமை என்ற கண்ணா டிக்குள் 
தெரியுமா உன் உருவம் 
உண்மை என்ற தீபம் அன்றோ 
உந்தன் ஒளிவடிவம் 
சந்தம் என்ற அணிகலன்கள் 
சாற்ற மனமில்லை 
அனுபவத்தில் நனையும் போதோ 
ஆடைக ளும்தொல்லை 
பசிக்குநான் என்னைப் புசிக்கநீ என்ற 
மர்மம் அறியாமல் 
படிக்க லாமே எனநினைத்துப் 
பழகத் தொடங்கினேன்
இழக்க இழக்க இன்னும் என்னை 
இழக்க விரும்புகிறேன் 
இதற்கு மேலும் வார்த்தை யாட 
என்ன இருக்கிறது 
வார்த்தைக ளாலொரு மஞ்சம் அமைக்கக் 
கட்டளை இடுகின்றாய் 
மனமும் மனமும் தழுவிக் கொள்ள 
மௌனம் போதாதா 
சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து ரசிப்போம் 
சேர்ந்து புசிப்போம் நாம் 
தீப வாசல் திறந்து வைத்தால் 
சேர்ந்து வசிப்போம் நாம் 
உன்னுள் என்னை உலகம் காண 
ஒளிகொடுப் பாய்கவிதா 
ஒவ்வோர் அணுவும் உனக்கா கத்தான் 
உணர்வு புரியாதா 
வார்த்தைக ளாலொரு மஞ்சம் அமைக்கக் 
கட்டளை இடுகின்றாய் 
மனமும் மனமும் தழுவிக் கொள்ள 
மௌனம் போதாதா 
29.01.2000