Tuesday, March 8, 2016

சிவஸ்துதி - கிரேஸி மோகன்

எத்துணைப் பெரிய கவிஞர்களுடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்மையெல்லாம் சிரிக்க வைக்கும் கிரேஸி மோகன் எவ்வளவு பெரிய நாடகக்காரன் | தனக்குள் இருக்கும் கவிஞனை மறைத்துக் கொண்டு கோமாளி வேடமிடும் நாடகக்காரன். பலே மோகன். அவன் எழுதிய சிவஸ்துதியைப் படித்து மலைக்கலாமே. கவிஞர்களையே திகைக்க வைக்கும், "விழி கர்ப்பப்பை " போன்ற அசத்தலான மஹாவாக்கியங்களில் சொக்கித் திளைக்கலாமே'

உண்டென்று ஒன்றுண்டு கேளாய் -அதை
உண்டு நான் உமிழ்கிறேன் ஒவ்வொரு நாளாய்
விண்டவர் கண்டிலர் கண்டாய் -அதைக்
கண்டு நீ கொண்டாட காட்சிகள் உண்டாய்....(2)

பதி பசு பாசங்கள் மூன்றும் -முறையே
விதி மதி வினை என்ற விவகாரமாகும்
நிதி உந்தன் நெஞ்சிலே காண்பாய் -அது
புதிதல்ல மணம்வீசும் பூத்த மலரான்மா....(3)

புதிரான பூலோகக் கல்லை -நீ
பொய்யென்றும் மெய்யென்றும் பேரிடத் தொல்லை
அதுவென்றும் இதுவென்றும் இல்லை -சுத்த
அதுவே இதுவாக ஆனந்த எல்லை....(4)

 பண்டைநாள் வந்ததோர் பூச்சி -அது
 பலவாய்ப் பெருகிடப் பாரென்று ஆச்சி
 கொண்டதோர் கோலமே காட்சி -அதை
 உண்டில்லை கண்டிடும் உறுதி ஆராய்ச்சி....(5)

 செத்ததோர் பாம்பிந்த தேகம் -சுக
 துக்கமிதில் காண்பது செல்லாத லாபம்
 அத்தைக்கு மீசைமேல் மோகம் -அத்தை
 சித்தப்பன் பார்த்திட சிரைத்திடும் யோகம்....(6)

 வேடனார் வேடத்தில் இறைவன் -அவனே
 விருந்தாகி நீயுண்ண வலைவீசும் இரைவன்
 பாடெல்லாம் அவனென்று பறைவாய் -ஜீவ
 பாவத்தில் பசுபாசம் மெழுகாகக் கரைவாய்....(7)

 பார்முதல் பூதம்நீ அல்ல -பஞ்ச
 புலன்களை ஆண்டிட முயலாதே வெல்ல
 யாரந்த நானென்று உள்ளே -உன்னிப்
 பாரவன் ஆன்மனாய் ஆகுவான் மெல்ல....(8)

 அன்பே சிவமென்ற ஜோதி -அதன்
 ஆதார சக்தியே அருளென்ற பாதி
 பண்பான பக்தர்கள் மீதி -இந்தப்
 பாங்குணர்ந் தோற்க்கில்லை பூலோக வ்யாதி....(9)

போக்கத்த சொப்பனம் நனவு -ஆழ்ந்த
தூக்கத்தில் நிற்பவன் யாரென்று வினவு
சாக்கிதால் சஞ்சலம் தீரும் -ரமண
வாக்கிதை மேற்கொள்ள வழிவந்து சேரும்....(10)

இறப்பதும் பிறப்பதும் யாரு -இங்கு
இருக்கையில் ஆராய்ந்து யோசித்துப் பாரு
உறக்கமே இறப்பென்ற மாயை -உணர
உறங்காமல் உறங்கிடப் போடான்மப் பாயை....(11)

நம்பிக்கை அறிவாக நீளும் -அவ
நம்பிக்கை அறியாமை அதுகுப்பைக் கூளம்
எம்பிக்கை போடட்டும் தாளம் -ஆன்ம
ஏகாந்த வாசியின் ஏற்றமே மூலம்....(12)

இல்லாத இகம்சொப்ப னங்கள் -அதில்
இன்பத்தைத் துய்ப்போர்கள் இருள்பெற்ற மாக்கள்
உள்ளது ஓராயி ரங்கள் -உதறி
உணர்ந்திடு உணர்வென்னும் உச்சிப் பனங்கள்....(13)

சும்மா இருந்திடல் சுகமே -என்று
சொன்னார்கள் முன்னோர்கள் சிவமாகு அகமே
நம்மால் இயன்றது நகமே -அது
நாளாக நாளாக நம்பிக்கை முகமே....(14)

துன்மார்கப் பாதையில் துன்பம் -அந்த
சன்மார்கமே சச்சிதா னந்த இன்பம்
தென்மார்கம் பார்த்திடும் அன்பன் -மவுன
தத்துவம் தோள்கொடுத் தேவுதவும் நண்பன்....(15)

ஓயாது துழைத்திடும் பெண்மை -சக்தி
ஓங்கார நாதத்தின் ரீங்காரத் தன்மை
தாயாகி அன்பர்க்கு நன்மை -நல்கும்
தத்துவம் அவளந்த பித்தர்க்கும் அம்மை....(16)

போகாத ஊருக்கு போக -இங்கு
சாகாது சாகிறோம் ஜனனித்து நோக
தேகான்ம பாவம் முடிக்க -சிவ
தேசிகன் சரணார விந்தம் பிடிக்க....(17)

செல்லாதா காசிந்த மேனி -இது
இல்லாத போதுமி ருப்பவன் ஞானி
கல்லாலின் கீழுற்ற கோலம் -அது
சொல்லாமல் காட்டிடும் சித்தாந்த ஜாலம்....(18)

பல்லாண்டு பல்லாண்டு வாழி -அந்த
பரசிவம் ஒன்றுதான் பவுருஷம் தோழி
உள்ளாண்ட போதவன் போதம் -வெளி
உலகத்தில் விளையாட வேடிக்கை பூதம்....(19)

சூலாயுதம் கொண்ட கையை -சக்தி
வேலாயுதன் வந்த விழிகர்ப்பப் பையை
ஆலால கண்டத்து மெய்யை -எண்ண
அதுநெஞ்சில் ஊற்றிடும் ஆனந்த நெய்யை....(20)

பொன்னார் மேனியன் இடையில் -வரிப்
புலித்தோல் பூண்டவன் ஏறுவான் விடையில்
உன்னார்வம் அவனெதிர் பார்ப்பான் -கொள்ள
உண்ணா முலையோடு வந்தருள் சேர்ப்பான்....(21)

சங்கர சங்கர சம்போ சிவ சங்கர சங்கர சங்கர சம்போ....

No comments:

Post a Comment