Tuesday, March 8, 2016

கோமளமே - Ramaseshan




கஞ்ச  மலர்களைக் கைகளில்  ஏந்திடும்
கொஞ்சும் அழகேநீ  கோமளமே- தஞ்சம்
உனதடி  என்றும் தொழுதிடுவேன்  மஞ்சுபோல்
என்துயர் மாறும்  மகிழ்ந்து !

பார்வைகள் ஜ்வாலைகளாகும்..சம்போ மகாதேவ தேவ - Ramanan

பார்வைகள் ஜ்வாலைகளாகும்
உன்பார்வைக்கு வேள்பட்ட பாடொன்றே போதும்!
நான்காண நீதோன்றும் காலம்! - இந்த நானொன்றை மட்டும் நீ எரியூட்ட வேண்டும் (சம்போ மகாதேவ தேவ)

அரவங்கள் அணியென்று ஆடும்! உன் ஆலத்தில் துளியேனும் கடன்கேட்கும் போலும்! இதயத்தில் நீ தோன்றும் காலம்! என்
இடமுள்ள விடம்கூட நின்கண்டம் மேவும்! (சம்போ மகாதேவ தேவ)

திரிசூலம் பகையாவும் தீர்க்கும்! உன் திறமான கரம்சேர்ந்து உறவாடி வாழும்! பரிவோடு எனைப்பார்க்கும் காலம்! உன் பரிவாரம் தனிலென்னை ஒன்றாக்க வேண்டும்! (சம்போ மகாதேவ)

இடபாகம் அன்னைக்கென்றாகும்! உன் இதயமும் அதனாலே அவளே என்றாகும்! உடனேகி அவளோடு தோன்றும் அந்த ஒருகணத்தோடினிப் பிறவாமை வேண்டும்!  (சம்போ மகாதேவ தேவ)

சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே - Ramanan

மனம் கொன்ற பாவம் தனைக் கண்ட கோலம்
மலர் மாலை யாகிப் பதம் சூடும் காலம்
விசித்ரம் வினோதம் விளங்காத போதம்
சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

அசைவற்ற கண்கள் அகண்ட ப்ரபஞ்சம்
அமைதித் தடாகம் அலைகள் சுநாதம்
சினத்தோடிருக்கும் தனித்தேன் தரங்கம்
சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

துரும்பாகி நெஞ்சில் துளிர்க்கின்ற கண்ணீர்
அரும்பாத முன்வந் தணைக்கின்ற தெய்வம்
கரங்கள் விசாலம் வரங்கள் சுபாவம்
காருண்யமே ஈசன் காட்டும் ப்ரபாவம்
சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

அவன்தந்த வார்த்தை அவன்வைத்த போதை
அவன்செய்த மாயை அகந்தைப் பதாகை
சிவன்சொந்தம் என்கின்ற போதே வசந்தம்
சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

அலுக்காது நாமம் அடங்காது தாகம்
கணம்தோறும் நெஞ்சத்தில் காபாலி நடனம்
நடுங்கித் துகள்போல் நொறுங்கட்டும் காலம்
பயங்கள் விதிப்பேய்கள் யாவும் நிர்மூலம்
சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

புயல்வீசும் பாதம் நிழல்தேடும் வேதம்
புஜம்போன்ற மெளனத்தில் ஆரங்கள் கீதம்
கணங்கள் யுகங்கள் மயங்கும் ஸ்வரங்கள்
சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

சிரம்தாழ்த்தி எங்கள் சிவன்வெற்றி சொல்ல
கரம்பற்றி மெல்லக் கரைசேர்க்கும் செல்வன்
கபாலன் தயாளன் கனல்மின்னும் சூலன்
அருள்தேடும் கைக்குள் அமர்கின்ற பாலன்
சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

உயிர்நின்ற போதும் உணர்வாக மோதும்
அருள்வீசும் தீபம் அகண்ட ப்ரகாசம்
பதம்கண்ட நெஞ்சில் கணம்தோறும் தில்லை
சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

சிவஸ்துதி - கிரேஸி மோகன்

எத்துணைப் பெரிய கவிஞர்களுடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்மையெல்லாம் சிரிக்க வைக்கும் கிரேஸி மோகன் எவ்வளவு பெரிய நாடகக்காரன் | தனக்குள் இருக்கும் கவிஞனை மறைத்துக் கொண்டு கோமாளி வேடமிடும் நாடகக்காரன். பலே மோகன். அவன் எழுதிய சிவஸ்துதியைப் படித்து மலைக்கலாமே. கவிஞர்களையே திகைக்க வைக்கும், "விழி கர்ப்பப்பை " போன்ற அசத்தலான மஹாவாக்கியங்களில் சொக்கித் திளைக்கலாமே'

உண்டென்று ஒன்றுண்டு கேளாய் -அதை
உண்டு நான் உமிழ்கிறேன் ஒவ்வொரு நாளாய்
விண்டவர் கண்டிலர் கண்டாய் -அதைக்
கண்டு நீ கொண்டாட காட்சிகள் உண்டாய்....(2)

பதி பசு பாசங்கள் மூன்றும் -முறையே
விதி மதி வினை என்ற விவகாரமாகும்
நிதி உந்தன் நெஞ்சிலே காண்பாய் -அது
புதிதல்ல மணம்வீசும் பூத்த மலரான்மா....(3)

புதிரான பூலோகக் கல்லை -நீ
பொய்யென்றும் மெய்யென்றும் பேரிடத் தொல்லை
அதுவென்றும் இதுவென்றும் இல்லை -சுத்த
அதுவே இதுவாக ஆனந்த எல்லை....(4)

 பண்டைநாள் வந்ததோர் பூச்சி -அது
 பலவாய்ப் பெருகிடப் பாரென்று ஆச்சி
 கொண்டதோர் கோலமே காட்சி -அதை
 உண்டில்லை கண்டிடும் உறுதி ஆராய்ச்சி....(5)

 செத்ததோர் பாம்பிந்த தேகம் -சுக
 துக்கமிதில் காண்பது செல்லாத லாபம்
 அத்தைக்கு மீசைமேல் மோகம் -அத்தை
 சித்தப்பன் பார்த்திட சிரைத்திடும் யோகம்....(6)

 வேடனார் வேடத்தில் இறைவன் -அவனே
 விருந்தாகி நீயுண்ண வலைவீசும் இரைவன்
 பாடெல்லாம் அவனென்று பறைவாய் -ஜீவ
 பாவத்தில் பசுபாசம் மெழுகாகக் கரைவாய்....(7)

 பார்முதல் பூதம்நீ அல்ல -பஞ்ச
 புலன்களை ஆண்டிட முயலாதே வெல்ல
 யாரந்த நானென்று உள்ளே -உன்னிப்
 பாரவன் ஆன்மனாய் ஆகுவான் மெல்ல....(8)

 அன்பே சிவமென்ற ஜோதி -அதன்
 ஆதார சக்தியே அருளென்ற பாதி
 பண்பான பக்தர்கள் மீதி -இந்தப்
 பாங்குணர்ந் தோற்க்கில்லை பூலோக வ்யாதி....(9)

போக்கத்த சொப்பனம் நனவு -ஆழ்ந்த
தூக்கத்தில் நிற்பவன் யாரென்று வினவு
சாக்கிதால் சஞ்சலம் தீரும் -ரமண
வாக்கிதை மேற்கொள்ள வழிவந்து சேரும்....(10)

இறப்பதும் பிறப்பதும் யாரு -இங்கு
இருக்கையில் ஆராய்ந்து யோசித்துப் பாரு
உறக்கமே இறப்பென்ற மாயை -உணர
உறங்காமல் உறங்கிடப் போடான்மப் பாயை....(11)

நம்பிக்கை அறிவாக நீளும் -அவ
நம்பிக்கை அறியாமை அதுகுப்பைக் கூளம்
எம்பிக்கை போடட்டும் தாளம் -ஆன்ம
ஏகாந்த வாசியின் ஏற்றமே மூலம்....(12)

இல்லாத இகம்சொப்ப னங்கள் -அதில்
இன்பத்தைத் துய்ப்போர்கள் இருள்பெற்ற மாக்கள்
உள்ளது ஓராயி ரங்கள் -உதறி
உணர்ந்திடு உணர்வென்னும் உச்சிப் பனங்கள்....(13)

சும்மா இருந்திடல் சுகமே -என்று
சொன்னார்கள் முன்னோர்கள் சிவமாகு அகமே
நம்மால் இயன்றது நகமே -அது
நாளாக நாளாக நம்பிக்கை முகமே....(14)

துன்மார்கப் பாதையில் துன்பம் -அந்த
சன்மார்கமே சச்சிதா னந்த இன்பம்
தென்மார்கம் பார்த்திடும் அன்பன் -மவுன
தத்துவம் தோள்கொடுத் தேவுதவும் நண்பன்....(15)

ஓயாது துழைத்திடும் பெண்மை -சக்தி
ஓங்கார நாதத்தின் ரீங்காரத் தன்மை
தாயாகி அன்பர்க்கு நன்மை -நல்கும்
தத்துவம் அவளந்த பித்தர்க்கும் அம்மை....(16)

போகாத ஊருக்கு போக -இங்கு
சாகாது சாகிறோம் ஜனனித்து நோக
தேகான்ம பாவம் முடிக்க -சிவ
தேசிகன் சரணார விந்தம் பிடிக்க....(17)

செல்லாதா காசிந்த மேனி -இது
இல்லாத போதுமி ருப்பவன் ஞானி
கல்லாலின் கீழுற்ற கோலம் -அது
சொல்லாமல் காட்டிடும் சித்தாந்த ஜாலம்....(18)

பல்லாண்டு பல்லாண்டு வாழி -அந்த
பரசிவம் ஒன்றுதான் பவுருஷம் தோழி
உள்ளாண்ட போதவன் போதம் -வெளி
உலகத்தில் விளையாட வேடிக்கை பூதம்....(19)

சூலாயுதம் கொண்ட கையை -சக்தி
வேலாயுதன் வந்த விழிகர்ப்பப் பையை
ஆலால கண்டத்து மெய்யை -எண்ண
அதுநெஞ்சில் ஊற்றிடும் ஆனந்த நெய்யை....(20)

பொன்னார் மேனியன் இடையில் -வரிப்
புலித்தோல் பூண்டவன் ஏறுவான் விடையில்
உன்னார்வம் அவனெதிர் பார்ப்பான் -கொள்ள
உண்ணா முலையோடு வந்தருள் சேர்ப்பான்....(21)

சங்கர சங்கர சம்போ சிவ சங்கர சங்கர சங்கர சம்போ....

அவன் சிவன் - K Ravi

சொக்கன் என்றாலும் சுடலை என்றாலும்
தக்கனைக் கொன்ற ருத்ரன் என்றாலும்
முக்கண் என்றாலும் மூர்க்கன் என்றாலும்
அக்கணமே வரும் ஆண்டவன் அவனே

ஆட்டம் என்றாலும் அடியவர் திரளும்
கூட்டம் என்றாலும் கூத்தென்றாலும்
பாட்டெடுத்தாலும் பிச்சை எடுத்தாலும்
நாட்டமுடன் வரும் நாயகன் அவனே

வெண்ணீ றணிந்தாலும் விழிகள் கலுழ்ந்து
கண்ணீர் பொழிந்தாலும் கவியிசைத்தாலும்
உண்மை உரைத்தாலும் பொய்யென்றாலும்
அண்மை நிழலாகும் அண்ணலும் அவனே

தங்கும் தங்கும்! - சிவசூரி.

தென்னாடுடைய சிவனே போற்றி!


வார்தங்கும் சடைதங்கும் நீருடனே
 வளர்மதியும் தங்கும் தங்கும்,
ஏர்தங்கும் கண்டத்தில் இன்னருளும்
 நமக்கென்றும் தங்கும்  தங்கும்!
கார்தங்கும் தேவியவள் காதலினால்
 இடப்பாகம் தங்கும் தங்கும்!
தார்தங்கும் விதமாகத் தானாடும்
 பாம்பென்றும் தங்கும் தங்கும்!

ஆர்தங்கும் அனல்தங்கும் அண்ணலவன்
 அருளென்றும் தங்கும் தங்கும்!
கூர்தங்கும் திரிசூலம் கொண்டாடும்
 நெஞ்சத்தில் தங்கும் தங்கும்!
மார்தங்கும் கொன்றைமலர் மணமெல்லாம்
 நம்நெஞ்சில் தங்கும் தங்கும்!
கார்தங்கும் கழலடியும் கவிநெஞ்சில்
 களிப்புடேனே தங்கும் தங்கும்!

ஊர்தங்கும் உயிர்தங்கும் ஒளியாக
 என்றென்றும் தங்கும் தங்கும்,

நீர்தங்கும் நிலமெங்கும் நிர்மலனின்
 எழிலென்றும் தங்கும் தங்கும்!
தேர்தங்கும் சிவனாரைத்  தரிசிக்கத்
 தெய்வங்கள் தங்கும் தங்கும்!
நார்தங்கும் மலர்போல நம்நாவில்
 திருநாமம் தங்கும் தங்கும்!


பார்தங்கும் பாவென்றும் போதெல்லாம்
நம்நெஞ்சில் தங்கும் தங்கும்,
சீர்தங்கும் சிவனாரைச் செப்புகின்ற
 பாவென்றும் தங்கும்  தங்கும்!
நேர்தங்கும் நிரைதங்கும் நிகரில்லாச்
 செந்தமிழும் தங்கும் தங்கும்!
பேர்தங்கும் புகழ்தங்கும் பெம்மானின்
 திருவருளால் தங்கும் தங்கும்.

சிவசூரி.

பெண் - Ramaseshan

ஓயா  மலுழைத்து நல்லுலகம் மேன்மையுற
தாயாய்த் தரணியில் வந்தவளே - சேயாகக்
கண்டு கனிவுடன் தன்குடும்பம் பேணிடும்
பெண்ணுக்கு யார்தான் நிகர் !