ஒற்றைமரப் பூங்குயில்தன்
உதிரம் குரலாக்கி
ஓலமிடும் பாட்டிலதன்
உள்ளம் தெரிகிறது!
மற்றவனக் குயில்களெங்கே!
விட்டுவிட்டுப் போயினதோ?
விட்டுவிட்டுப் போனதனால்
சிட்டுக்குயில் வாடியதோ?
கூவி யழைக்கிறதோ!
கொடுந்தனிமைப் புழுக்கமிதோ?
கூவியழைத்து மெதிர் குரலொலிக்கக் கேளாமல்
பாவித் தனிக்குயில்தன்
பாட்டால் அழுதிடுதோ!
கேள்விகளை எழுப்புகின்ற
கேவல் குரல்சுகத்தால்
பதிலறியும் ஆவலுற்றுப்
பாஷைகற்க முயல்கிறேன்!
குயில்பாஷை அறிந்தோரென்
குருவாக முன்வந்தால்
பயில்வேன் உடனடியாய்
பாட்டெடுப்பேன் முதற்படியாய்!
என்றுசில வாறெல்லாம்
எண்ணமுற்ற நாட்களிலே
தற்செயலாய் எதிர்ப்பட்டக்
கண்ணாடி பிம்பமதில்
சோக வரி ஓடுகிற விழியும்
ஓர்சிற குமுடை
காகநிறக் குயிலாயெனைக்
கண்ணாடி காட்டுகையில்
கூ கூ கூ என்றென்
குரல்மாறிப் போனது ஏன்?
No comments:
Post a Comment